×

கோவை கலெக்டரிடம் எஸ்.பி.வேலுமணி மீது மேலும் ஒரு மோசடி புகார்: மாநகராட்சி பணியில் கோடிக்கணக்கில் ஊழல்

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது மேலும் ஒரு மோசடி புகார் கோவை கலெக்டரிடம் வழங்கப்பட்டது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சி.கே.முகமதுஅலி, கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் நேற்று அளித்த புகார் மனு விவரம்:
நான், கோவை மாநகராட்சி 86வது வார்டு அன்பு நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் முறைகேடுகள் நடந்து இருக்கின்றன. குறிப்பாக, மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போர்வெல் பணிகள், உப்பு தண்ணீர் லீக்கேஜ் பணிகள் என பலவற்றிலும் மக்கள் வரிப்பணம் முறைகேடாக செலவழிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கென குறிப்பிட்ட சிலருக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு, அவர்கள் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். இதேபோல், பூங்கா, உள்விளையாட்டு அரங்குகள் அமைக்க பல லட்சம் ரூபாய் முறைகேடாக செலவழிக்கப்பட்டு இருக்கிறது.  இதையும், முன்னாள் அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒரு சிலரே பணி செய்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளனர். இதில், குறிப்பிட்ட தொகையைவிட கூடுதல் தொகை மாநகராட்சியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல், கோவை மாநகராட்சி எல்லையில் விளம்பர பதாகைகள் குறிப்பிட்ட சில நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு, இதிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரை பயன்படுத்தி உள்ளனர்.

அதேபோல், கோவையில் பல இடங்களில் நல்லறம் அறக்கட்டளை சார்பாக குளங்கள் தூர்வாரப்பட்டு, பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது. குளங்களை தூர்வார லட்சக்கணக்கில் பணம் செலவுசெய்ய நல்லறம் அறக்கட்டளைக்கு எங்கிருந்து பணம் வந்தது. இந்த அறக்கட்டளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் செலவிடப்படும் பணம் எங்கிருந்து வருகிறது என்ற விஷயங்களையும் தாங்கள் முறையாக விசாரிக்க வேண்டும்.

குறிப்பாக, மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுவாணி குடிநீர் இணைப்பு, உப்பு தண்ணீர் இணைப்பு, லீக்கேஜ் பணிகளில் முறைகேடாக கொடுக்கப்பட்ட பில் சம்பந்தமான தொகை, பூங்கா, உள்விளையாட்டு அரங்கம் அமைக்க உண்மையாக செலவிடப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை தாங்கள் முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

Tags : SB Velumani , Coimbatore Collector, S.P.Velumani, Fraud Complaint, Corporation
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...