×

ரவுடி குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 4 பேர் சரண்; தம்பதி கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மொபட்டில் சென்ற ஒருவரை, ஆட்டோவில் வந்த 4 பேர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் டி.பி.சத்திரம், 16வது குறுக்கு தெருவை சேர்ந்த சம்பத்குமார் (48) என்பது தெரிந்தது. திமுக பிரமுகரான இவர், பொதுக்கூட்டங்களில் மேடை பேச்சாளராகவும் இருந்துள்ளார். இவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த டொக்கா (எ) அரிகுமார் (21), ஜங்குபார் (எ) ஸ்ரீதர் (21), மோகனவேல் (எ) பிளாக்பெர்ரி (20), நவீன்குமார் (24) ஆகிய 4 பேர் அண்ணாநகர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அதிகாலை 3 மணி சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பத்குமாருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி லெனின், எதிர் தரப்பினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சம்பத்குமார்,  போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த ரவுடி லெனினின் கூட்டாளிகள் ஸ்ரீதர், மோகனவேல், நவீன்குமார் ஆகியோர், சம்பத்குமாரை கொலை செய்தது தெரிந்தது. அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த கொலை தொடர்பாக டி.பி.சத்திரத்தை சேர்ந்த விநாயகம் (47), அவரது மனைவி கற்பகம் (41) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மாணவனுக்கு வெட்டு
புழல் காந்தி 3வது தெருவை சேர்ந்த திமுக பிரமுகரும், சட்ட கல்லூரி மாணவருமான குமணன் (27) என்பவரை முன்விரோத தகராறில் சரமாரியாக வெட்டிய வழக்கில், பம்மதுகுளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (27), வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த நாகராஜ் (20), புழல் சக்திவேல் நகரை சேர்ந்த டில்லிபாபு (23), புழல் பஜனை கோயில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (21), புழல் மதுரா மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (21), நேதாஜி (23), புழல் அம்பேத்கர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த அபினேஷ் (20) மற்றும் புழல் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



Tags : DMK ,Rowdy , Rowdy, police, DMK official, murder
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...