×

பாஜ.வுக்கு எதிராக இணைந்து செயல்பட எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை: 14 கட்சிகள் பங்கேற்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி  உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் கீழ் விசாரணை நடத்துவது,  சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்வது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,  காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டன.

இந்த ஒற்றுமையை எதிர்காலத்திலும் தொடர்வது, அடுத்தாண்டு நடக்கும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ.வை  தோற்கடிப்பது போன்றவற்றிலும் இணைந்து செயல்பட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். இது தொடர்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த தினமான இன்று, எதிர்க்கட்சிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்த, சோனியா காந்தி கடந்த வாரம் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ்  தாக்கரே உள்ளிட்டோர், சோனியாவின் அழைப்பை ஏற்றுள்ளனர். இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இவர்கள் உட்பட 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Sonia ,BJP , BJP, Opposition Leader, Sonia, Consulting
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...