×

வௌிநாடுகளுக்கு தப்ப ஆப்கான் மக்கள் முயற்சி தலிபான்கள் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

* விமான நிலையம் செல்ல விடாமல் விரட்டியடிப்பு
* பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடித்தது

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறுவதை தடுக்க, விமான நிலையம் செல்ல விடாமல் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்து விட்டதால், அங்கு வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் உயிருக்கு பயந்து, வெளிநாடுகளுக்கு தப்ப முயற்சி செய்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க, காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்கள் மீதும் தலிபான்கள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினமான நேற்று, ஆசாதாபாத், கோஸ்ட் உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் முதல் துணை அதிபரான அம்ருல்லா சலே தலைமையில், தலிபான் கொடிகளை அகற்றி விட்டு, ஆப்கன் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடினர். தலிபான்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள், `எங்கள் தேசியக்கொடி, எங்களது அடையாளம்’ என முழக்கமிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தலிபான்கள் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கியால் சுட்டனர். இந்த  துப்பாக்கிச்சூட்டிலும், கூட்ட நெரிசலிலும் சிக்கி பலர் உயிரிழந்தனர். அதே நேரம், ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்காவை விரட்டி அடித்து வெற்றி பெற்று விட்டதாக கூறி தலிபான்கள் நேற்று சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

அரசை வழிநடத்தும் 7 பேர் ஆப்கானின் தலிபான் ஆட்சியை இந்த அமைப்பின் ராணுவ கமாண்டர் ஹைபதுல்லா அகுண்சடா, துணை தலைவர் அப்துல் கனி பர்தார், தீவிரவாத குழு தலைவர் சிராஜூதின் ஹக்கானி, தலிபான் நிறுவனரின் மகன் முகமது யாகூப், சமரச தூதர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி, முக்கிய தூதர் ஷெர் முகமது அப்பாஸ், முக்கிய செய்தி தொடர்பாளர் ஜபைதுல்லா முஜாகித் ஆகிய 7 தலைவர்கள் வழிநடத்தி வருகின்றனர்.

ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தம்
இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் பொது இயக்குநர் அஜய் கூறுகையில், ``ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் வழியாக இந்தியா - ஆப்கான் இடையே நடைபெற்று வந்த ஏற்றுமதி, இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளனர்,’’ என்றார்.

ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே தப்பினேன்
தலிபான்கள் காபூலை கைப்பற்றியதும், அதிபர் அஷ்ரப் கனி, மூட்டை மூட்டையாக பணத்துடன் தப்பி ஐக்கிய அரபு எமிரேட்டில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் முறையாக அஷ்ரப் கனி நேற்று தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘காபூலில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே நாட்டை விட்டு வெளியேறினேன். கடந்த 1996 அப்போதைய அதிபர் முகமது நஜிபுல்லாவை தலிபான்கள் நடுரோட்டில் சிக்னல் கம்பத்தில் தொங்க விட்டு கொன்றனர்.

அதேபோல், என்னையும் கொல்ல திட்டமிட்டு இருப்பதாக தலிபான்களுக்கு நெருங்கியவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதனால், காலில் செருப்பு கூட போட முடியாத நிலையில் போட்டிருந்த உடையுடன் தப்பி வந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் கோடிகணக்கான பணத்தை எப்படி நான் எடுத்து சென்றிருக்க முடியும்?’ என்று கூறியுள்ளார்.

Tags : Afghans , Abroad, the Afghan people, the Taliban
× RELATED 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில்...