சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு மானியம் ரூ.1248.92 கோடி விடுவிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கை: பயிர் காப்பீட்டுத் திட்டம் சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 2021-22ம் ஆண்டில் 14  தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில்  செயல்படுத்தப்படும்.  இத்திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் ஒன்றிய அரசு தனது பங்கை குறைத்து விட்டதால், மாநில அரசின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாலும், இவ்வாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. எனினும் தமிழக அரசு எடுத்த பெரும் முயற்சியினால், இந்திய வேளாண் காப்பீட்டு கழகம் (பொது காப்பீட்டு நிறுவனம்) மற்றும் இப்கோ-டோக்கியோ ஆகிய இரு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன.

மேற்குறிப்பிட்ட காரணங்களினால், கடந்த 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவு செய்ய கால அவகாசம் உள்ள பயிர்களான மக்காசோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைகிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் காப்பீடு செய்யப்படும். எனினும், காரீப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய இயலாத பயிர்களுக்கு முக்கியமாக நெற்பயிர் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு அடைய நேரிட்டால் மாநில பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

மேலும் சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில் (அக்டோபர் முதல் மார்ச்) அறிவிக்கை செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை பொறுத்தவரை, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை காரீப், 2020 பருவத்திற்கு ரூ.107.54 கோடியை சுமார் 1,64,173 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டு சம்பா நெற்பயிர் நிவர் புயல், புரவிப் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் பெரும் சேதமடைந்து அதற்கான இழப்பீட்டுத் தொகை மாநில பேரிடர் நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு “காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1248.92 கோடி விடுவித்துள்ளது.  ஆகையால் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் / தேசியமயாக்கப்பட்ட வங்கிகளிலும்,  கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>