×

சின்சினாட்டி ஓபன் 3வது சுற்றில் ஆஷ்லி, ஒசாகா

சின்சினாட்டி: வெஸ்டர்ன் அண்டு சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில்  முன்னணி வீராங்கனைகள் ஆஷ்லி பார்தி, நவோமி ஒசாகா  ஆகியோர்  காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தி(முதல் ரேங்க்), ஜப்பான் வீராங்கனை  நவோமி ஒசாகா((2வது ரேங்க்)),  ஆகியோர்  நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றிருந்தனர்.  ஆஷ்லி நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்  6-4, 7-6 என நேர் செட்களில்  பிரிட்டன் வீராங்கனை  ஹீதர் வாட்சனை(67வது ரேங்க்)  வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2வது சுற்றில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட்களில்  அமெரிக்காவின் இளம் வீராங்கனை  கோரி காபை(24வது ரேங்க்) வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். அதேபோல்  ஜெலனா ஆஸ்டோபெங்கோ(லாட்வியா),   பார்போரா கிரெஜ்சிகோவா(செக் குடியரசு), பெலிண்டா பென்சிக்(சுவிட்சர்லாந்து),  ) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதிப்பெற்றனர். மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில்  ஆந்த்ரே ரூபலேவ்(ரஷ்யா), ஜான் இஷ்னர்(அமெரிக்கா), டீகோ ஸ்வர்ட்ஸ்மேன், (அர்ஜென்டீனா), அலெக்சாண்டர் ஸ்வெரவ்  (ஜெர்மனி) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றில் விளையாட உள்ளனர்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபயூருடன் களமிறங்கிய இந்திய வீராங்கனை சானியா மிர்சா இணை 5-7, 2-6 என நேர்செட்களில்  வெரோனிகா(ரஷ்யா), எலனா ரிபாகினா(கஜகிஸ்தான்) இணையிடம் தோற்று வெளியேறியது.

சிமோனா மீண்டும் விலகல்    
காயம் காரணமாக   இத்தாலி ஓபனில் இருந்து விலகிய  சிமோனா ஹாலேப்(ருமேனியா),   சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேஷனல் பேங்க் ஓபனில் நேரடியாக 2வ சுற்றில் களமிறங்கினார். அதில் தோற்று வெளியேறினார்.  இந்நிலையில் சின்சினாட்டி ஓபனில் களம் கண்ட சிமோனா முதல் சுற்றில் வென்றார். தொடர்ந்து நேற்று நடந்த 2வது சுற்றில் காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெசிகா பெகுலா(அமெரிக்கா) 3வது சுற்றுக்கு முன்னேறினார்.  இம்மாத இறுதியில் தொடங்க உள்ள யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சிமோனா பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Tags : Ashley ,Osaka ,Cincinnati Open , Open Tennis, Ashley, Osaka
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி