நீதிமன்றங்களில் இடைக்கால தடை பெற்றாலும் கோயில் சொத்துகளை மீட்க சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை மீட்பதற்கு ஏற்கனவே, சிவில் நீதிமன்றங்களில், அறநிலையத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சட்டப்பிரிவு 78 நடைமுறைக்கு வந்த பின்னரும் நிலுவையில் உள்ளது. உதாரணமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, டெய்லர் சாலையில் உள்ள சொத்துகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை சிட்டிசிவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு எவ்வித முன்னேற்றமும் இன்றி நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

எனவே அவ்வாறான நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில் சொத்துகளுக்கான உரிமை ஆவணங்கள், வருவாய் ஆவணங்கள், கோயில் பெயரில் இருக்கும் பட்சத்திலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம், 1959 பிரிவு 78 ன்படி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் உரிமையுடன் திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்து உரிய மனு தாக்கல் செய்ய, சட்டப்பிரிவு 43ன்படி வழக்கினை திரும்ப பெற ஆணையரின் அனுமதி பெற வேண்டும். சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டம், 1950 பிரிவு 78ன்படி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் உரிமையுடன் திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேலும் ஒரு சில நேரங்களில் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளில் உள்ள அனுபவதாரர்களிடமிருந்து வாடகை நிலுவைகளை தீர்வு செய்ய கேட்டு கோயில் நிர்வாகிகளால் அனுப்பப்படும் அறிவிப்புகளில் சட்டப்பிரிவு 78ன்படி உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டதை எதிர்த்து வாடகைதாரர்களால் சிவில் நீதிமன்றங்களில் சட்டப்படியான நடைமுறை பின்பற்றப்படாமல் மீட்பதில் இடையூறு செய்யக்கூடாது என கேட்டு கோயில்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் தடையாணை வழக்குகளில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் வழக்கை காரணம் காட்டி அவர்கள் மீது சட்டப்பிரிவு 78ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இந்நிலையில் சட்டப்பிரிவு 78ன் கீழான நடவடிக்கை சட்டப்படியான நடவடிக்கை என்பதால், வழக்கு நிலுவையில் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தொடர தடையேதும் இல்லை. அத்தகையவற்றில் மேற்கண்ட தடையாணை கோரும் வழக்கில் கோயில் தரப்பில் சட்டப்பிரிவு 78ன்படியான நடவடிக்கை சட்டப்படியான நடவடிக்கை என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும், சட்டப்பிரிவு 108 குறித்து நீதிமன்றத்தில் எடுத்து அனுப்பிய வழக்கினை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் தன்மை குறித்து கேட்டு தீர்மானிக்க வேண்டுமென நீதிமன்றத்தை வலியுறுத்தி உரிய தீர்வு காண வேண்டும்.

Related Stories:

More
>