×

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் கவர்னருடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது.  இந்நிலையில், கொடநாடு பங்களாவில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 ஆயிரம் கோடி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரின் சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்க முக்கிய விஐபி ஒருவரின் உத்தரவின் பேரில் கொள்ளையடிக்க சென்றபோதுதான் செக்யூரிட்டியை சொலை செய்ததாக முக்கிய குற்றவாளியான சயான் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க அனுமதி கேட்டனர். கவர்னர் மாளிகை அனுமதி வழங்கியதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்தியலிங்கம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது, 5 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றையும் அளித்தனர். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மீது சோதனை என்று பெயரில் வழக்குக்களை தொடர்ந்திருக்கிறார்கள். திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது.

அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த தருணத்தில் அரசு புதிதாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது சட்ட ரீதியாக நடைபெறுகிற ஒரு சம்பவம். சட்டத்தின் ரீதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கை இதோடு ஒப்பிடக்கூடாது என்றார்.

குழப்பத்தில் உளறிய எடப்பாடி
எடப்பாடி பேட்டியளிக்கும்போது, ‘நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுதான் விசாரணை நடைபெறுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?’ என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி, ‘எந்த நீதிமன்றம்’ என்று கேட்டார். உடனே மற்றொரு நிருபர், ‘செஷன்ஸ் நீதிமன்றம்’ என்று கூறுகிறார். ‘செஷன்ஸ் நீதிமன்றம் இல்லையே. பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு தெரியாதது ஒன்றும் கிடையாது’ என்று எடப்பாடி கூறுகிறார். அப்போது, பின்னால் இருந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எடப்பாடியை அழைத்து, நீதிமன்றம் அனுமதி பெற்றுள்ளார்கள் என்று தலையையாட்டி சொல்கிறார். அதன்பிறகு, எடப்பாடி எப்படி சமாளிப்பது என தெரியாமல், அதை பற்றி வாயே திறக்கவில்லை.

Tags : Kodanadu ,OBS ,EPS , Kodanadu murder, robbery, governor, OBS, EPS
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...