×

உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்பட வேண்டும் தமிழகத்தில் மதுவிலக்கு வரும் என்று நம்புகிறேன்: ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் உருக்கம்

சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியது திருப்தி அளித்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாததும் மனநிறைவை அளிக்கவில்லை என்று நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.கிருபாகரன் ஆகஸ்ட் 21ல் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, அடுத்த மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகள், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்க தலைவர் லூயிசாள், லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன், மூத்த வக்கீல்கள் பி.வில்சன், அர்விந்த் பாண்டியன், அரசு வக்கீல்கள் பி.முத்துக்குமார், நீலகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பிரிவு உபசார உரை நிகழ்த்திய அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, மக்கள் நீதிபதி என அழைக்கப்படும் நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெறுவது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். மக்கள் நலன்தான் அவரின் தீர்ப்புகளில் அதிகம் இருந்துள்ளது என்றார். இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், தனது, தாய், தந்தை, ஆசான்களை நினைவு கூர்ந்து கண்கலங்கினார். அவர் பேசியதாவது: என்னை நான் ஒரு போதும் நீதிபதியாக நினைத்து கொண்டதில்லை. சாதாரண நபராகவே இருந்துள்ளேன். எனது தீர்ப்புகளில் மக்கள் நலன் இருக்கும். என்னை சட்டபூர்வமான பஞ்சாயத்து நடத்துகிறார்கள் என்றுகூட பேசினார்கள்.

மக்கள் சேவைதான் முக்கியம். 125 ஆண்டு பாரம்பரியம் கொண்ட உயர் நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு இளம் வழக்கறிஞர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.  எல்லா வழக்குகளிலும் மனசாட்சி படியே தீர்ப்பளித்துள்ளேன். நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது நிறைவை அளிக்கவில்லை. விரைவில் தமிழகத்தில் முழுவதுமாகவோ, பகுதியாகவோ மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று நம்புகிறேன். இதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலைகளிலும் உள்ள மக்களுக்கு நீதி எளிதாக சென்றடைய வேண்டும். அதற்காக உச்ச நீதிமன்ற கிளைகள் உருவாக்கப்பட வேண்டும். தென்னிந்தியாவில் சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஓய்வு பெறும் நாளில் 7 அமர்வுகளில் தீர்ப்பு
நீதிபதி என்.கிருபாகரன் ஓய்வு பெறுவதையடுத்து அவர் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பு விவரங்கள் நேற்று பட்டியலிடப்பட்டன. தலைமை நீதிபதியுடன் ஒரு அமர்வு, நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி தமிழ்செல்வி, நீதிபதி பார்த்திபன், நீதிபதி வேல்முருகன், நீதிபதி பொங்கியப்பன் ஆகியோருடன் தனித்தனி அமர்வுகளிலும் அமர்ந்து தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்புகளை வாசித்தார். தனியாக அமர்ந்து ஒரு வழக்கிலும் தீர்ப்பு வழங்கினார். ஓய்வு பெறும் நாளில் தான் விசாரித்த அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்புகளை தயார் செய்து ஒரே நாளில் 7 அமர்வுகளில் அமர்ந்து தீர்ப்புகளை வாசித்தார்.

Tags : Supreme Court ,Chennai ,Kirupakaran , Supreme Court Branch, Prohibition, Judge Kirubakaran
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...