×

மாநிலத்துக்கு தர வேண்டியதில் ரூ.30 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு குறைத்து விட்டது தமிழகத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி வருவாய் இழப்பு: சட்டப்பேரவையில் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வேளாண்மைத்துறை பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசியதாவது:  தமிழக பொதுமக்களுக்கு குடிநீர், சாலை, மருத்துவமனை, கட்டிடம், வீடு கட்டி கொடுக்க வேண்டுமென்றால், நிதிச்சுமையை சரிகட்டாமல் எதையும் செய்ய முடியாது. அதனால், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையை நாம் திருத்தியே ஆக வேண்டும்.  தமிழகத்தின்தற்போதைய சூழ்நிலையின் மோசம் குறித்து தெளிவுப்படுத்த விரும்புகிறேன். 2019-20ம் ஆண்டில் மாநிலத்தின் சுயவருமானம்  ரூ.2.10 லட்சம் கோடியாக இருக்கும் எனக்கூறப்பட்டது. ஆனால், உண்மையாக மாநிலத்தின்  சுயவருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி தான். ரூ.90 ஆயிரம் கோடி  குறைந்து விட்டது.

ஒன்றிய அரசு பரிந்துரைத்த தொகை, 5 வருடத்தில் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 450 கோடி. ஆனால், வந்த தொகை ரூ.1 லட்சத்து  29 ஆயிரத்து 22 கோடி தான். 14வது நிதிக்குழுமம் கொடுத்த பரிந்துரைக்கு மாறாக ஒன்றிய அரசு ரூ.30 ஆயிரம் கோடி குறைத்து விட்டது. இதை பார்த்தால் 5 வருடத்தில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் இழந்து விட்டோம்.  மாநிலத்தில், பழைய பென்சன் திட்டம், புதிய பென்சன் திட்டம் 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 4 அரசாங்கம் வந்து போன பிறகும் முடிவு எடுக்க முடியவில்லை.

அகவிலைப்படி உயர்வு எதற்காக செய்கிறோம். பொருட்களின் விலை அதிகரிக்கிறது. அதனால், வருமானத்தை விட செலவு அதிகம் வருகிறது. அதனால், அகவிலைப்படியை நாம் உயர்த்துகிறோம். அதே நேரத்தில் ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தையும் நாம் அதிகரிக்கிறோம். ஆனால், நாம் விதவை ஓய்வூதியத்தை அதிகரிக்கவில்லை. அன்றைக்கு இருந்த ரூ.1000 அப்படியே அதிகரிக்கிறது. அதே மாதிரி வரியையும் உயர்த்தவில்லை. எந்த ஒரு நாட்டிலும் வருவாய்க்கும்-செலவுக்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்காது. அவர்கள் வரவையும்-செலவையும் ஒரே மாதிரியே நிலையாக வைத்திருப்பார்கள்.

ஆனால், தமிழகத்தை போன்று ஏற்றத்தாழ்வு இருக்காது. இந்த சூழ்நிலையை நாம் மாற்றியே ஆக வேண்டும். நாம் மந்த நிலையில் இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் வெல்வது கடினமான முயற்சி. இதை மாற்றுவதற்கு வலுவான எதிர்ப்பாக இருக்கும். நானே எதிர்க்கட்சியாக இருந்தபோது மாற்ற வேண்டும் எனக்கூறியதை ஆளும் கட்சியாக வந்த பின்பும் மாற்ற முடியவில்லையே என்பது வேதனையாக இருக்கிறது. சில நேரத்தில் எனக்கே அச்சம் வருகிறது. நாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நாம் முதல்வரின் வழிகாட்டுதலோடு செயல்பட வேண்டியது நமது கடமை. முதல்வர் மு.க.ஸ்டாலின் வல்லுனர் குழுவின் முதல் கூட்டத்தை கூட்டினார். அப்போது அவர், இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு சூழலை உருவாக்க வேண்டும்.

இதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். என்னுடைய கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலம் சாத்தியமாகி விடாது. உண்மையான மாற்றம் அதிரடியான மாற்றம் மூலம் தான் சாத்தியம். எத்தகைய மாற்றத்துக்கும் தயாராக அரசாக தமிழகம் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கனவுகள் முக்கியம். கனவுகள் இலக்குகளுக்கு அடித்தளம். முதல்வரின் கனவை நிறைவேற்றதான் நாமெல்லாம் இருக்கிறோம். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கனவுகளை நிறைவேற்றாமல் போவது தான் மிகப்பெரிய தோல்வி. மக்கள் கனவுகளை ஒருங்கிணைந்து முதல்வர் தனது கனவாக பார்க்கிறார்.

நிதிக்குழு சொன்னதும்... தமிழகத்தில் நடந்ததும்
14வது நிதிக்குழு கடந்த 2014ல்  பரிந்துரை செய்து, தமிழகத்தில் வரவு செலவு திட்டம் எப்படி இருக்கப்போகிறது  என்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி கடந்த 2014-15 முதல் 2019 முதல் 2020  வரை 5 ஆண்டுகளுக்கு மாநிலத்தின் சுய வருமானத்தை எதிர்பார்த்தனர். 2014-15ல்  ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி, 2015-16ல் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் கோடி,  2016-17ல் ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி. 2017-18ல் ரூ.1 லட்சத்து 89  ஆயிரம் கோடி, 2018-19ல் ரூ.2 லட்சத்துத்து 10 ஆயிரம் கோடி வருமானம் வரும்  என எதிர்பார்த்தது. ஆனால் உண்மை நிலை என்ன. முதல் வருடம் ரூ.89 ஆயிரம் கோடி. இதில் வித்தியாசம் என்று பார்த்தால் ரூ.30 ஆயிரம் கோடி. இரண்டாவது  வருடம் ரூ.95 ஆயிரம் கோடி என்ற நிலையில் ரூ.44 ஆயிரம் கோடி வித்தியாசம்  உள்ளது. மூன்றாவது வருடம் ரூ.55 ஆயிரம் கோடி, அடுத்த வருடம் ரூ.64 ஆயிரம்  கோடி என வித்தியாசம் இருந்தது.

எம்ஜிஆர் வரியை உயர்த்தியது ஏன்?
நிதி தேவை இருக்கிற நேரத்தில் வரியை அதிகரிக்கவில்லை என்றால் அரசாங்கம் நடத்த முடியாது. இதற்கு  ஒரு சிறந்த உதாரணம், அதிமுக எம்எல்ஏ உதயகுமார் கூறுகையில், எம்ஜிஆர்  சத்துணவு திட்டத்தை எப்படி விரிவாக்கினார் என்று கூறினார். அப்போது, விற்பனை வரி 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை எம்ஜிஆர் அதிகரித்தார். அதன் மூலம் உணவை அளித்தார். ஜனநாயகத்தில் சமுதாயம் எதிர்பார்க்கிற கடமை. விற்பனை வரியில் சாமானியர்களின் வருமானத்தில் கூடுதலாக கட்டுவார்கள். ஆனால், விற்பனை வரியை உயர்த்தி குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது முக்கியம். அது எந்த வகையில் செய்தாலும் பரவாயில்லை என்று செய்தார். அதை நான் பாராட்டுகிறேன் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

அகவிலைப்படி ஏன் தள்ளிவைக்கப்பட்டது?
நிதிப் பற்றாக்குறை காரணமாக தான், 6வது ஊதிய குழுவின் ஊதியம் ஒரு வருடம் கழித்து தான் போட்டோம். 7வது ஊதியக்குழு ஊதியமும் 2 வருடம்  கழித்துதான் போடப்பட்டது. அகவிலைப்படியை நாங்கள் ஒரு வருடம் ஒத்தி  வைத்தோம். 2002ல் ஜெயலலிதா ஆட்சி இருந்த போது 6 முறை அகவிலைப்படியை ஒத்தி வைக்கப்பட்டன. நிதி இல்லாதபோது எவ்வளவு திறமை இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சமாளிக்க முடியாது. இது அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன் என்றார் தமிழக நிதியமைச்சர்.

Tags : Union government ,Tamil Nadu ,PDR Palanivel Thiagarajan , State, Union Government, Loss of Revenue, Legislature, PDR. Palanivel Thiagarajan
× RELATED ஜவுளித்துணி, ஆயத்த ஆடை, தோல்பொருட்கள்...