×

சீறிப்பாய்ந்த தோட்டா

நன்றி குங்குமம் தோழி

இளவேனில் வாலறிவன்

தோட்டாவிற்கு முன் அவரது அழகிய புன்னகையும் சீறிப்பாய.. ‘இளவேனில் வாலறிவன்’ என்கிற தமிழ்ப் பெயர் இணையத்தில் வைரலானது.
பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை  துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இவர்.தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தன்னுடைய மூன்று வயதில் பெற்றோருடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனரியோ நகரில் நடைபெற்ற, உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்றால் 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறலாம் என்பதால் இந்தத் தொடர் அதிக முக்கியத்துவம் பெற்றது. இதில் 20 வயதான இளவேனில் பிரிட்டன் மற்றும் சீன வீராங்கனைகளை தோற்கடித்து 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார்.

இந்த ஆண்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இது. உலகக்கோப்பை சீனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையும் இளவேனிலுக்கு கிடைத்துள்ளது. 13 வயதில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆர்வம் ஏற்பட, முறையான பயிற்சியினை எடுக்கத் தொடங்கினார். குஜராத் மாநிலம் சார்பாக துப்பாக்கிச் சுடுதலில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர், துப்பாக்கிச் சுடும் வீரர் ககன் நராங்கிடம் முறையான பயிற்சியை மேற்கொண்டார்.

2018ல் சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையிலும் இந்தியா சார்பாக விளையாடி, தங்கம் வென்று சாதனை படைத்தார். மீண்டும் 2019ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஜுனியர் உலகக் கோப்பை போட்டியிலும் தங்கம் வென்றார். சீனியர் பிரிவில் இளவேனில் தங்கம் வெல்வது  இதுவே முதல் முறை. இவர் குஜராத் வீராங்கனையாக இருந்தாலும், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தமிழர். கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் பயிற்சியினை மேற்கொண்ட இளவேனில் வாலறிவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

தொகுப்பு: மகேஸ்வரி

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்