×

சென்னையில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிக்கும் அபாயம்

புதுடெல்லி: சென்னையில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில், 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிக்கும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்து உருவான டெல்டா வகை வைரஸ்கள், 135 நாடுகளில் பரவி உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும் டெல்டா வகை வைரசால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த சென்னை இன்ஸ்டிடியூஷனல் எத்திக்ஸ் கமிட்டியுடன் இணைந்து ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு அறிக்கை, ‘ஜெர்னல் ஆப் இன்பெக்‌ஷன்’ இதழில் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: டெல்டா வகை உருமாற்ற வைரஸ் தொற்றுக்கு பிறகு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி பெறுபவர்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக பிற ஆய்வுகளில் தெரிய வந்தது. இதையடுத்து, சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வகை வைரசால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இறப்பு எண்ணிக்கை குறைகிறது.

மிதமான மற்றும் கடுமையான நோய் உள்ள நோயாளிகளின் விகிதம், தடுப்பூசி போடாதவர்களை காட்டிலும், 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களிடம் குறைவாக காணப்படுகிறது. மேலும், இவர்களில் யாரும் இறக்கவும் இல்லை. அதே நேரம், ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட 3 நோயாளிகளும், தடுப்பூசி போடப்படாத 7 நோயாளிகளும் இறந்துள்ளனர். மே மாதத்தில் ஆய்வை முடித்த பிறகு, அந்த விவரம் தமிழக சுகாதாரத் துறையுடன் பகிரப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : ICMR ,Chennai , Chennai, ICMR, Vaccine, Corona
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...