×

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தரமற்ற கட்டிடம் ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை?...ஆய்வறிக்கை வந்த பின் முடிவு; பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில், தொட்டாலே உதிரும் வகையிலான கட்டிடம் கட்டியதால், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது. தரமற்ற கட்டிடம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில், கட்டுமான பணிகளில் தவறு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் எழும்பூர் உறுப்பினர் பரந்தாமன் (திமுக) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:

புளியந்தோப்பு கே.பி.பூங்கா அருகில் கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 2 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. தொட்டால் சிணுங்கி என்ற தாவரத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் `தொட்டாலே உதிரும் சிமென்ட்’ கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் நவீன ஆட்சி அதிமுக ஆட்சி. இந்த கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டுமானத்தை கட்டிய நிறுவனத்தினர் யார் என்று கண்டுபிடித்து, அவர்கள் 10 ஆண்டுகள் எங்கெல்லாம் கட்டிடங்களை கட்டி முடித்துள்ளார்களோ அந்த கட்டிடங்களை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். புளியந்தோப்பு பகுதியில் கட்டிடம் கட்டி முடித்த பிறகு, தரமானது என்று சான்று அளித்த அதிகாரிகள், பணம் செலுத்தலாம் என்று முடிவெடுத்த அதிகாரிகள், இந்த குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில், பெரம்பூரில் ‘‘முரசொலி மாறன்’’ பாலம் தரமாக கட்டப்பட்டது. அந்த கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டது என்று மறைந்த ஜெயலலிதா, கலைஞரையும், நமது முதல்வரையும் நள்ளிரவு கைது செய்தார். தரமற்ற முறையில் என்று உண்மைக்கு புறம்பாக குற்றச்சாட்டு சொல்லி வழக்கு பதிவு செய்தனர். இன்றைக்கு, தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்கு, அந்த துறையின் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று, அவரை கிரிமினல் நடவடிக்கைக்கு கொண்டு வர வேண்டும். சபாநாயகர் அப்பாவு: திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பெரம்பூர் பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்று முடித்து விட்டார்கள்.

ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்: எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புளியந்தோப்பு பகுதியில் அதிமுக ஆட்சியில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. வீடு கட்டி முடித்த பின்னரும் எங்களுக்கு இன்னும் வீடு வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து நானும், அமைச்சர் சேகர்பாபுவும் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தோம். அடையாளம் தெரியாத சில நபர்களால் குடிநீர், கழிவு நீர் குழாய்கள், மின் தூக்கிகள் சேதமடைந்திருந்தது. அதை ஆய்வு செய்து, ஆடி மாதத்திற்கு பிறகு குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மழை காலம் என்பதால் சில பயனாளிகள் அங்கு குடியிருந்து வருகிறார்கள்.

தற்போது ஊடகங்களில் செய்தி வந்ததையடுத்து அந்த கட்டிடத்தின் தரம் மற்றும் உறுதித்தன்மையை அறிந்து கொள்ள, அமைச்சர் சேகர்பாபு மற்றும் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தோம். அந்த கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து அறிக்கை அளிக்க, இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து தரும் அறிக்கையில், கட்டுமான பணிகளில் தவறு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டால் அந்த குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன்.

இது கலைஞரால், ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம். ஏழைகள் தங்குவதற்காக கட்டப்படும் வீடுகள். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இதுபோன்ற கட்டிடங்களை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது. யார் தவறு செய்தாலும் வேடிக்கை பார்க்காமல், நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரும், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் 3 நாட்களுக்கு முன்பு எங்களை கூட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

Tags : Puliyanthoppu ,Chennai , Puliyanthoppu, substandard building, OPS, criminal action, council
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...