×

முகூர்த்தம், ஓணம் பண்டிகை எதிரொலி: தாழம்பூ ஒன்று ரூ.800க்கு விற்பனை..!

நெல்லை: முகூர்த்தம் மற்றும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எதிரொலியாக நெல்லையில் பூக்கள் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு தாழம்பூ ரூ.800க்கு விற்பனையானது. ஆடி மாதம் முடிந்து ஆவணி தொடங்கிய நிலையில் சுபநிகழ்ச்சிகள் பல நடைபெறத் தொடங்கியுள்ளன. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகள், வரலட்சமி விரத பூஜைகள் நடைபெற உள்ளன. இதுபோல் கேரளாவில் நாளை மறுதினம் 21ம் தேதி திருஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக செல்லத் தொடங்கியுள்ளன. வியாபாரிகள், முகவர்கள் நெல்லைக்கு வந்து பூ சந்தைகளிலும் பூக்களை விளைவிக்கும் சில விவசாயிகளிடமும் நேரடியாக கொள்முதல் செய்து வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் நெல்லையில் பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.400க்கு விற்பனையானது. இது நேற்று ரூ.600ஆக ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.400ல் இருந்து ரூ.500 ஆகவும், சம்மங்கி ரூ,200ல் இருந்து ரூ.400 ஆகவும், உயர்ந்துள்ளது. ரோஸ் மற்றும் பன்னீர் ரோஸ், அரளி, ரூ.150ல் இருந்து ரூ.200 ஆகவும், நந்தியாவட்டை ரூ.150ல் இருந்து ரூ.250 ஆகவும், மரிக்கொழுந்து ஒரு கிலோ ரூ.150 ஆகவும் விற்கப்பட்டன. வரலட்சுமி பூஜைக்காக வைக்கப்படும் தாழம்பூ ஒன்று ரூ.800க்கு விற்பனையாகி அதிர்ச்சியளித்தது. இதன் வரத்தும் குறைவாகவே இருந்தது. பலர் இதன் விலையை கேட்டு விட்டு வாங்காமல் சென்றனர். இந்நிலையில் இன்றும், நாளையும் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக பூ மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Mukurtham, Onam festival echo: A hyacinth sells for Rs 800 ..!
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்