சென்னை : மாணவர்களின் கற்றல் இழப்பு, உளவியல் சிக்கலை தீர்க்க ரூ.200 கோடி மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், கொரோனா தொற்றால் கடந்த 1.5 ஆண்டுகளாக பள்ளிகளை திறக்க முடியாத சூழல் இருப்பதாக குறிப்பிட்டார்.திடீரென பள்ளிகள் திறக்கப்படுவதால் கற்றல் இழப்பு மற்றும் உளவியல் சிக்கல்களை மாணவர்கள் சந்திப்பார்கள் என்றும் இதனை சரி செய்ய கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
முதற்கட்டமாக 200 கோடி நிதியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி நேரத்திற்கு பிறகு சிறப்பு வகுப்புகளாக நடத்தப்படும் என்று தெரிவித்தார். சென்னையில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு மறைந்த திமுக பொதுச் செயலாளர் க அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் கூறியுள்ளார். நந்தனத்தில் உள்ள நிதித்துறைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு க .அன்பழகனின் பெயரை சூட்டப்படுவதாக தெரிவித்தார்.
இதனிடையே பேரவையில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து பேசிய அவர், “பெட்ரோல் விலை குறைப்பால் மக்கள் பயனடைந்துள்ளதை அறிய முடிகிறது. புள்ளிவிவரங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. பெட்ரோல் விலை ரூ. 3 குறைப்பு பொருளாதார நிபுணர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 11.28 லட்சம் லிட்டம் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது மக்களுக்கு மிகுந்த பயனுள்ள விலைக்குறைப்பாக மாறியிருப்பது இதன்மூலம் தெரியவருகிறது” என்றார்.