மீனாட்சி கோயில் ஆவணி மூலத்திருவிழா நரியை பரியாக்கிய திருவிளையாடல்

மதுரை :  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று நரியை பரியாக்கிய திருவிளையாடல் நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் 8ம் நாளான நேற்று நரியை பரியாக்கிய திருவிளையாடல் நடந்தேறியது. மாலை 6 மணிக்கு வடக்கு ஆடி வீதியில் உள்ள பதினாறுகால் மண்டபத்தில் குதிரை கயிறு மாறிக் கொடுத்த லீலை முடிந்து, விடி வகையறா திருக்கண் நடைபெற்றது.

அதன் பின்னர் இரவு 8 மணிக்கு அம்மன், சுவாமி தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் வலம் வந்தனர். ஆவணி மூலத் திருவிழாவில் இன்று பகல் 1.05 மணிக்கு மேல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை கோயில் வளாகத்தில் உள்ள பழைய கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இந்த விழாவிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

நரியை பரியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு குறித்து மீனாட்சி கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘மன்னர் அரிமர்த்தன பாண்டியனிடம், ‘தென்னவன் பிரமராயன்’ பட்டத்துடன் மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தார். தன் நாட்டுப் படைக்கு என குதிரைகள் வாங்கிட, பெரும்பொருளைக் கொடுத்து மாணிக்கவாசகரை மன்னரும் அனுப்பி வைத்தார்.

‘திருப்பெருந்துரை’ அடைந்த மாணிக்க வாசகர், இறைவனைக் குருவாக்கி, அங்கேயே சிவாலய, சிவனடியார் திருப்பணிகளில் தன்னிடமிருந்த முழுப்பொருளையும் செலவிட்டார். அரசன் குதிரைகளுடன் வரும்படி அழைப்பு விட, செய்வதறியாத மாணிக்கவாசகர், இறைவனைத் தொழுதார். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்ற இறை அசிரீரிப்படி, இதனையே மன்னரிடமும் தெரிவித்தார். ஆவணி மூலத்திருநாளில் குதிரைகள் வராமல் போக, மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து மன்னன் துன்புறுத்திட, இதனை மாணிக்கவாசகர் இறைவனிடம் முறையிட காட்டிலுள்ள நரிகள் எல்லாம் குதிரைகளாகி, சிவகணங்கள் குதிரைப் பாகர்களாகி, மதுரை வந்தததால் மன்னரும் மகிழ்ந்து மாணிக்கவாசகரைப் பாராட்டினார். ஆனால் அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாகி, காடு நோக்கி ஓடின. மன்னரிடம் மாட்டிக் கொண்ட மாணிக்கவாசகரை, இறைவன் காத்ததாக வரலாறு உள்ளது’’ என்றனர்.

Related Stories:

>