×

முறையான விசாரணை நடத்தி கொடநாடு சம்பவத்தில் உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: மர்மமாக இறந்த டிரைவர் கனகராஜின் அண்ணன் வேண்டுகோள்

சேலம்: கொடநாடு கொலை சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி, மறைந்து கிடக்கும் உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மர்மமாக இறந்த டிரைவர்  கனகராஜின் அண்ணன் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சம்பவம் நடந்த 5வது நாளில் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தனகிரி என்னும் இடத்தில் நடந்த விபத்தில் பலியானார்.  இந்த வழக்கு மீதான மறு விசாரணை நேற்று முன்தினம் துவங்கியுள்ள நிலையில், கனகராஜின் அண்ணன் தனபால் நேற்று கூறுகையில், ‘‘2017ல்  கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இதையடுத்து எனது தம்பி கனகராஜ் விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார். அது சம்பந்தமாக அதிமுக முக்கிய பிரமுகர் மீது அப்போதே குற்றம் சுமத்தி இருந்தோம். அன்று ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இருந்ததால் விசாரணையை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யார் யார் தவறு செய்தார்களோ, அவர்களை அழைத்து முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

யார் தவறு செய்தாலும் சரி, பின்னால் இருப்பவர்களானாலும் சரி, முறையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். உரிய விசாரணை நடத்துவதோடு மட்டுமல்லாமல், மறைந்து கிடக்கும்  உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துள்ள எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,’’ என்றார். இது தமிழக அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kodanadu incident ,Kanagaraj , Investigation, Kodanadu incident, Driver Kanagaraj, brother
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...