×

‘‘ஆன்லைன் மூலம் ஆசி வழங்குவேன்’’ மதுரை ஆதீனமாக பதவி ஏற்று விட்டேன்: நித்யானந்தா அறிக்கையால் மீண்டும் சர்ச்சை

மதுரை: மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டேன். ஆன்லைன் மூலமாக ஆசி வழங்குவேன் என நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்தவர் அருணகிரிநாதர் (77).  உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 13ம் தேதி காலமானார். இவரது மறைவுக்குப் பிறகு ஆதீன மடத்தின் அன்றாடப் பூஜைகளை இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மேற்கொண்டு வருகிறார். இவரை மதுரை ஆதீனமாக நியமிக்கும் விழா வரும் 23ம் தேதி மடத்தில் நடக்கிறது. இவர் 293வது மதுரை ஆதீனமாக நியமனம் செய்யப்படுவதை தொடர்ந்து, இவரது பெயர் ல ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி என மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து தப்பி ஓடி, ‘‘கைலாசா’’ என்ற நாட்டை உருவாக்கி வசிப்பதாக கூறி வரும் நித்யானந்தா, தற்போது மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டதாக  டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் நித்யானந்தா, ‘‘மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நான் பதவியேற்று விட்டேன். இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்க இருக்கிறேன். எனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ல பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என மாற்றிக் கொண்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்யானந்தாவை, கடந்த 2012ம் ஆண்டு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை அப்போதே அவர் திரும்ப பெற்றார். மேலும் ஏற்கனவே ஆதீன மடத்தில் நித்யானந்தா நுழைய தடை விதித்து, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டதாக நித்யானந்தா அறிவித்து, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Tags : Madurai Aadeen ,Nithyananda , Online, Madurai Aadeenam, Position, Nithyananda
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...