கொடநாடு கொலை வழக்கில் அதிமுகவினருக்கு அச்சம் எதற்கு?....வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன் பேட்டி

அவனியாபுரம்: கொடநாடு கொலை வழக்கில் குற்றம் இல்லை என்றால் அதிமுகவினர் எதற்கு அச்சப்பட வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். வைகோ: மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டி: தமிழக அரசு முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு ஒன்றிய அரசு தடையாக இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய சமூகநீதி ஆகும். கொடநாடு கொலை சம்பவம் படுபயங்கர பாதகமான செயலாகும். அங்கே இருந்த பணம், நகைகள், ஆவணங்களை திருடுவதற்காக செய்யப்பட்ட கொலையாகும்.

திருமாவளவன்: மதுரை விமான நிலையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி: கொடநாடு கொலை வழக்கில் குற்றம் இல்லை என்றால் அதிமுகவினர் அச்சப்பட தேவையில்லை. துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டுமே தவிர வெளிநடப்பு செய்யக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.  சாதிவாரியான இடஒதுக்கீடு சாத்தியம் தான். உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 50 சதவிகித உச்ச வரம்பை நீக்கி மத்திய அரசு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பாலகிருஷ்ணன்: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்த வேண்டும். கொடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக ஆட்சியில் இருந்தபோதே பல்வேறு தகவல்கள் வெளியானது. எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை வெளியில் விடாமல், அப்போதைய ஆட்சியாளர்கள் சிறையிலேயே அடைத்து வைத்திருந்தனர். கொடநாடு வழக்கில், குற்றவாளிகள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: