×

பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் வாய் தவறி பேசிவிட்டேன்: ஜாமீன் மனுவில் நடிகை மீரா தகவல்; செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஜாமீன் வழங்க கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுவில், என்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசிவிட்டேன். பேசியது தவறுதான்.

ஆனால், நான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டியலின மக்களோடு நான் நட்புடன் இருக்கிறேன். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் என்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இதேபோல், சாம் அபிஷேக் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ( வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

யூடியூப் சேனல் முடக்கம்?
தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் தொடர்பாக, அவதூறு வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது யூடியூப் சேனலை முடக்க சைபர் கிரைம் போலீசார் யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ஆட்பேசத்துக்குரிய வீடியோவை நீக்க கோரி உள்ளனர்.

Tags : Meera ,Sessions Court , Bail Petition, Actress Meera, Sessions Court, Trial
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி