பொதுமக்கள் தரிசன நிகழ்ச்சியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட கர்நாடக மாஜி அமைச்சர்

பெங்களூரு: பொதுமக்கள் தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்த ஒன்றிய அமைச்சரை வரவேற்பதற்காக நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் உள்பட கட்சி பிரமுகர்கள் மீது யாதகிரி போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், யாதகிரிக்கு பொதுமக்கள் தரிசனத்திற்காக பாஜவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பகவந்த் கூபா வந்திருந்தார். ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களை சந்தித்து, நன்றி கூறிய அவர், இறுதியாக யாதகிரி எரகொளே கிராமத்திற்கு வந்தார். அவரை பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபுராவ் சிஞ்சனசூர், எம்.எல்.ஏக்களான ராஜூ கவுடா, மங்கடரெட்டி முத்தியாலதா சுவாமி ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து எரகொளே கிராமம் முழுவதும் பாத யாத்திரையாக சென்ற அவர்கள், ஒவ்வொருவரையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது சில பொதுமக்கள் தங்கள் கையில் துப்பாக்கியுடன் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த மரியாதையை ஏற்று கொண்ட, ஒன்றிய அமைச்சர் பகவந்த் கூபா அவர்களை பாராட்டி கொண்டிருந்த நேரத்தில், முன்னாள் அமைச்சர் பாபுராம் சிஞ்சனசூர் பொதுமக்களின் கையில் இருந்த துப்பாக்கியை பிடித்து, வானத்தை நோக்கி சுட்டார். இதைத் தொடர்ந்து 2, 3 பேரின் கையில் இருந்த துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கியது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், கூட்டம் நடந்த இடத்தில் வந்து பார்த்தபோது, முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டது தெரியவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, எஸ்.பி வேதமூர்த்தி, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தும்படி யாதகிரி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதை ஏற்ற யாதகிரி கிராமப்புற போலீசார் முன்னாள் அமைச்சர் உள்பட கட்சி பிரமுகர்கள் மீது எப்.ஐ.ஆர் தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>