அமளியில் ஈடுபட்ட எம்பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க எனக்கு பயமில்லை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

பெங்களூரு: சட்டப்பேரவை, நாடாளுமன்றமும் இருப்பது மக்கள் பிரச்னைகளை  விவாதிக்கவும், ஆலோசிக்கவும், முடிவெடுக்கவும் தான். அங்கு வந்து தொந்தரவு  கொடுக்க கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.  கர்நாடக வர்த்தக சபை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:  மாநிலங்களவையில் சமீபத்தில் மோசமான நிகழ்வுகள் நடந்தன. அது போன்று நடந்து கொண்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான்  செல்லும் இடங்களில் நிறைய இளைஞர்கள் எனைப்பார்த்து, நீங்கள் இந்திய துணை  ஜனாதிபதி. பிறகு ஏன் சோகமாக உள்ளீர்கள் என்று கேட்கிறார்கள்.

சிலரின்  மோசமான நடவடிக்கையால் சோகமாக இருக்கிறேன் என்று அவர்களுக்கு பதிலளித்தேன்.  நாடாளுமன்றத்தில் நடக்கும் தரம் தாழ்ந்த நிகழ்வுகள் நமது நாட்டின் மதிப்பை  குறைத்து விடுகிறது. நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல; சில மாநில  சட்டமன்றங்களிலும் இது போன்று நடக்கிறது. ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் மக்களுக்கு உதாரணமாக விளங்க  வேண்டும். அவர்களே நாடாளுமன்றத்தில் மோசமாக நடந்து கொண்டால்  இளைஞர்கள் எந்த வகையில் அதை ஏற்றுக் கொள்வார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றத்தை விவாதிக்க, ஆலோசிக்க, முடிவெடுக்க பயன்படுத்த வேண்டும்.

தொந்தரவு  கொடுப்பதற்கு அல்ல. நாட்டின் நன்மைக்காக தொல்லை கொடுக்கலாம். மாநிலங்களவையில் மோசமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எனக்கு எந்த பயமுமில்லை.  தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பேன். மக்களால் தேர்வு  செய்யப்பட்ட பிரதிநிதிகள் வரும் நாட்களில் அவையின் கண்ணியத்தை  காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>