×

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டகாசம் ஷியா தலைவர் சிலை தகர்ப்பு பொழுதுபோக்கு பூங்கா எரிப்பு: அரசை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் தயக்கம்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள், தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் அடுத்தக்கட்ட செயல்களில் இறங்கியுள்ளனர். ஷியா பிரிவு தலைவரின் சிலையை தகர்த்துள்ள அவர்கள், பொழுது போக்கு பூங்காவையும் எரித்தனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க,  நேட்டோ படைகள் வெளியேறி வருவதால், தலிபான் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கம் ஓங்கியது. கடந்த ஞாயிறன்று அரசையும் கைப்பற்றியது. இதனால், இந்நாட்டில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தீவிரவாத ஆட்சி அமைந்து  இருப்பதால், அதை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.

தலிபான்கள் ஆட்சியை பிடித்ததும் அதை அங்கீகரிப்பதாக முதன் முதலில் அறிவித்த சீனா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பால் அதில் இருந்து பின்வாங்கி விட்டது. ‘தலிபான்கள் அரசு அமைத்த பிறகே, அதை ஆதரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்,’ என்று நேற்று அறிவித்தது. அதேபோல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஒதுங்கி நிற்கின்றன. பாகிஸ்தான் மட்டுமே ஆப்கானுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி வருகிறது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் அந்நாட்டை ஒதுக்கக் கூடாது. ஆப்கன் மக்களுக்கு சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியில் உதவ முன் வர வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார். இதற்கு ஏஞ்சலா எந்த உறுதியும் கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொழுதுபோக்கில் மக்கள் ஈடுபடுவதை விரும்பாத அவர்கள், அங்குள்ள பிரபல பொழுதுப் போக்கு பூங்காவை எரித்து நாசமாக்கினர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் பூர்வீக இனத்தவரான ஹஜாரா, ஷியா பிரிவினர் சன்னி பிரிவை சேர்ந்த தலிபான்களால் கொல்லப்பட்டனர்.

 இதனால், ஷியா பிரிவு தலைவர் அப்துல் அலி மஜாரி, அரசுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக போரிட்டார். கடந்த 1996ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததும் அவர் கொல்லப்பட்டார். தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் பாம்யன் மாகாணத்தில் அமைக்கப்பட்டு இருந்த அவரது உருவ சிலையை நேற்று தகர்த்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ஜி7 நாடுகள் ஆலோசனை
ஆப்கன் விவகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஜி-7 நாடுகள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.

போராட்டம் நடத்திய  2 பேர் சுட்டுக்கொலை
கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத்தில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடந்தது. இதில், ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டின் தேசியக்கொடியை ஏற்றுவதற்காக தலிபான்கள் கொடியை மக்கள் அகற்றினர். அவர்கள ்மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுவது மிக மிக அபூர்வமானது. ஆனால், கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று அது நடந்துள்ளது.

தப்பி ஓடிய அஷ்ரப் கனிக்கு ஐக்கிய அரபு எமிரேட் அடைக்கலம்
தலைநகர் காபூலை  தலிபான்கள் நெருங்கியதும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு  தப்பிச் சென்றார். அவர்  தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்று விட்டதாக முதலில்  தகவல் வெளியானது. ஆனால், அதை அந்நாடு மறுத்தது. இதனால், அஷ்ரப் கனி எங்கு  இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், அவரும். அவருடைய  குடும்பத்தினரும் தங்கள் நாட்டில் இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட் அரசு  அறிவித்துள்ளது. அவர்களை மனிதநேய அடிப்படையில் தங்கள் நாட்டில் தங்க  வைப்பது பற்றி  பரிசீலிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ள அது, அவர் தனது  நாட்டில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை கூற மறுத்து விட்டது.

Tags : Taliban ,Afghanistan ,Shia , Afghanistan, Taliban, Shia leader statue, world nations
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி