×

ஏழுமலையான் கோயிலில் பவித்ர உற்சவம் துவங்கியது: உற்சவர்களுக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  3 நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவர்களுக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தினந்தோறும்,   மற்றும் வருடாந்திர  பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக பவித்திர உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. அதன்படி மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதையொட்டி உற்சவர் சேனாதிபதி கோயிலில் ஊர்வலமாக ரங்கநாதர் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் புற்றுமண் சேகரிக்கப்பட்டு அங்குரார்பண பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து பவித்ர உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை உற்சவர்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, அங்கு உற்சவர்களுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் தீப, தூப, கற்பூர ஆரத்தி ஆகிய சமர்ப்பணங்கள் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெற்றன.

இதையடுத்து நெய்வேத்தியம் செலுத்தப்பட்டு யாகசாலையில் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, அதிகாரிகள் கலந்து கொண்டனர். பவித்ர உற்சவத்தின் 2வது நாளான இன்று பவித்ர மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும், ஆனந்த நிலையம், கொடிமரம், யோகநரசிம்மர், வகுலமாதா சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமர்ப்பிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை யாக பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.

Tags : Ezhumalayan temple , Ezhumalayan Temple, sacred festival, herbal medicine, anointing
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு...