ஆதார் சேவை மையத்தில் அலைக்கழிப்பதாக கூறி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் ஆதார் சேவை மையத்தில், அலைகழிப்பதாக கூறி மாணவர்கள் உட்பட பொதுமக்கள், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆதார் சேவை தொடர்பாக வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்க வழங்கப்படுகிறது. இருப்பினும், தினமும் 100க்கும் மேற்பட்டோர் ஆதார் சேவை மையத்திற்கு வந்து புதிய ஆதார் அட்டை,  திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஆதார் மையத்தை நாடுகின்றனர். வரிசையில் காத்து நிற்கும் முதல் 30 பேருக்கு மட்டுமே வழங்கப்படுவதால் அதிகாலை 4 மணிக்கே வட்டாட்சியர் அலுவலகம் வந்து காத்திருந்து காலை 10 மணி வரை டோக்கன் பெற காத்திருக்க வேண்டி உள்ளது.

 தினமும், 30 பேருக்கு மட்டும் வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு மறுக்கப்படுவதால், பல நாட்கள் ஆதார் மையத்தில் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அரசின் பல்வேறு   பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியம் என்பதால், பொதுமக்கள் பல நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், நேற்று காலை ஆதார் சேவை மையத்திற்கு பள்ளி சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு ஆதார் சேவை மையத்திற்கு வந்த அலுவலக பணியாளர்கள் ஆதார் சேவை பழுது ஏற்பட்டுள்ளதாக கூறிவிட்டதால், ஆத்திரமடைந்த பள்ளி சிறுவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை அலைக்கழிக்கப்படும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆதார் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கூட்டத்தை தடுத்து கொரோனா பரவல் தடுக்கும் வகையில் கூடுதலாக ஆதார் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து வட்டாட்சியர் மணிவாசகம் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஆதார் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி ஏற்று சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Related Stories:

>