கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதியும் வாங்கியுள்ளனர். இந்த சந்திப்பின்போது, ‘ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக செல்லும் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை சம்பவத்துக்கும் அதிமுக நிர்வாகிகள் யாருக்கும் தொடர்பு இல்லை.

ஆனாலும், இந்த வழக்கு விசாரணை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்படுவதால் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிலரை சிக்க வைக்க வாய்ப்புள்ளதாக சந்தேகப்படுகிறோம். அதனால், கொடநாடு கொள்ளை வழக்கை முதலில் இருந்து விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது. ஏற்கனவே நடைபெற்ற வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லிக்கு சென்று பாஜ மூத்த தலைவர்களை சந்திக்கவும் அதிமுக முன்னணியினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் அதிமுக தொண்டர்கள், தங்கள் கட்சி தலைவியின் வீட்டில் அதாவது கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை பற்றிய உண்மையான நிலவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான விசாரணை அறிக்கையையும் விரைவில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக தொண்டர்கள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>