×

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விவகாரம் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை: அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை

சென்னை: புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை புளியந்தோப்பு கே பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் அங்கிருந்த மக்களை வெளியேற்றிவிட்டு 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 17 மாதங்களில் 112.16 கோடி ரூபாய் செலவில் ஏ பி சி டி என நான்கு பிளாக்குகளில் 864 வீடுகள் கட்டப்பட்டன 9 அடுக்கு மாடி கொண்ட இந்த குடியிருப்பில் லிப்ட் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதே போன்று அதே இடத்தில் 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 18 மாதங்களில் 139.13 கோடி ரூபாய் செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன. இவை இரண்டும் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று அதிகமிருந்த நேரத்தில் தற்காலிக மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டன. தற்போது தொற்று குறைந்து உள்ளதால் அந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, அந்த வீட்டின் சுற்றுசுவர் பில்லர் படிக்கட்டுகள் இவை அனைத்தும் பெயர்ந்து பல ஆண்டுகள் ஆன கட்டிடம் போல உள்ளதாகவும், இதனால், இப்பகுதியில் இருக்க அச்சமாக உள்ளதாகவும் பொதுமக்கள் நேற்று முன்தினம் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது இதனையடுத்து நேற்று ஊரகத் தொழில் துறை மற்றும் குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம் பகுதிக்கு வந்து கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின்பு நிருபர்களை சந்தித்த தா.மோ.அன்பரசன் கூறியதாவது: 2019ம் ஆண்டு 864 வீடுகள் கட்டப்பட்டன.  

தற்போது, பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கழிவுநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் சரி செய்து இந்த குடியிருப்பை ஆடி மாதம் முடிந்த பிறகு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.  ஆனால் அதற்குள் சிலர் இந்த கட்டிடத்தில் குடியேறி விட்டனர் தற்போது இந்த கட்டிடம் சம்பந்தமாக ஐஐடி  ஆய்வு செய்ய  பரிந்துரை செய்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பிறகு அவர்கள் கொடுக்கும் கட்டிடத்தின் தன்மை குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* அவசர அவசரமாக பேட்ச் ஒர்க் பார்த்த அதிகாரிகள்:
புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சரி இல்லை என்று நேற்று செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து நேற்று அதிகாலையே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவசர அவசரமாக ஊழியர்களை வரவைத்து சிதிலமடைந்து கிடந்த அனைத்து இடங்களிலும் சிமெண்ட் வைத்து பூசி அதனை தெரியாத அளவிற்கு வண்ணம் பூசினர்.

* கட்டுமான நிறுவனம் சார்பில் விளக்கம்:
கட்டிடங்கள் தரமாக இருப்பதாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் ஏற்கனவே சான்று அளித்துள்ளதாகவும் இந்த கட்டிடத்தை கொரோனா முகாமாக மாற்றப்பட்டபோது தான் கட்டிடத்தில் சில இடங்களில் சிதைவுகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ஒப்பந்த நிபந்தனைகள் படி திருப்திகரமாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என சான்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் தற்காலிகமாக அமைத்து நோயாளிகளின் பாதுகாப்பு நலன் கருதி மதில் சுவர்களில் புதிய கிரில்கள் அமைத்து பயன்படுத்தி உள்ளதாகவும்.  மேலும், சட்டவிரோதமாக இந்த குடியிருப்பை சிலர் பயன்படுத்தியது. மின் விளக்குகள் மற்றும் லிப்ட் தடவாளங்கள் உள்ளிட்டவற்றை  சேதப்படுத்தி உள்ளனர். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Puliyanthope , Puliyanthope Cottage Replacement Board Unparasan warning
× RELATED ‘சென்னை புளியந்தோப்பில் தரமற்ற...