அதிமுக ஆட்சியில் லஞ்சமும், கமிஷனும் தலைவிரித்தாடியதால் தமிழகத்தில் தொழில் தொடங்க பெரு நிறுவனங்கள் அஞ்சின: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் லஞ்சமும், கமிஷனும் தலைவிரித்தாடியதால் தமிழகத்தில் தொழில் தொடங்க பெரு நிறுவனங்கள் அஞ்சின என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்(திமுக) கலந்து கொண்டு பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, திமுக தலைவர் நினைத்திருந்தால் என்றோ ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால், ஜனநாயக வழியில் மக்களை சந்தித்து தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தலைவர் பொறுமை காத்தார்.

கலைஞர் மறைந்த போது, அண்ணா நினைவிடத்துக்கு அருகாமையில் தன்னுடைய நினைவிடமும் அமைய வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விடாமல் கூட கடந்த அதிமுக அரசு முட்டுக் கட்டை போட்டது. நம்முடைய  தலைவர் அப்போது ஒரு சிறு கண்ணசைவை காட்டியிருந்தால் கூட அன்று நிலைமை வேறு மாதிரி அமைந்திருக்கும். ஆனால், நம் தலைவர்  பொறுப்புமிக்க அரசியல் தலைவராக சட்டப் போராட்டம் நடத்தி, கலைஞரின் கடைசி விருப்பம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிலை நாட்டினார்.  

கலைஞர் காட்டிய வழியில் தான் முதல்வர் தலைமையிலான அரசு இந்த 100 நாட்களுக்குள்ளாகவே எண்ணற்ற சாதனைகளை செய்து முடித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத விஷயங்களை கூட செய்து காட்டியுள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள முதல் இ-பட்ஜெட் மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்லவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், உயர்கல்வியை பொறுத்தவரையில், இந்தாண்டு 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய திறன் பயிற்சி என்பது அவசியமானது என்பதன் அடிப்படையில் கழக அரசு ரூ.60 கோடி செலவில் 15 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் திறன் மேம்பாட்டு மையங்களை அமைக்கவுள்ளது வரவேற்கத்தக்கது. கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கே பெரு நிறுவனங்கள் அஞ்சின. ஏனென்றால் அந்தளவுக்கு லஞ்சமும், கமிஷனும் தலை விரித்தாடியது. இங்கு லஞ்சம் கொடுத்த காரணத்தால் ஒரு பெரு நிறுவனம் அமெரிக்காவில் அபராதம் கட்டிய நிகழ்வுகள் எல்லாம் இருந்தன. ஆனால், நமது அரசு முறைகேடுகள் ஏதுமின்றி புதிய தொழில் தொடங்க ஏதுவாக ஒற்றைச்சாளர முறையை பின்பற்றவுள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னை மாநகரை மேம்படுத்த எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கவும், இளைஞர்களும், அடுத்த தலைமுறையினரும் விவசாயத்தை நோக்கி வரவும் தேவையான அறிவிப்புகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. வீடிருந்தும் வருவாயின்றி, பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியோர்களுக்கு மீண்டும் முதியோர் உதவி தொகையை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த அதிமுக அரசு ஒருபுறம் மாநிலத்தை சீரழித்தது என்றால், இன்னொரு புறம் ஒன்றிய அரசும் தமிழ்நாட்டை வஞ்சித்தது. 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜ அசுர பலத்துடன் அதாவது மிகப்பெரிய பெரும்பாண்மையுடன் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது.  அப்படி என்றால் அந்த அரசு எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்?. ஆனால், அப்படி நடக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் நம் அனைவரின் பதிலும். ஜி.எஸ்.டியை அமல்படுத்தியதால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ரூ.15,475 கோடி அளவு ஜி.எஸ்.டி பாக்கி ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது. இது இப்படி என்றால், மாநிலத்துக்கு பல ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் ஒற்றை செங்கல் நட்டு வைத்ததோடு அப்படியே உள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியமிக்க நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும் தொடர்கிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 43 மருத்துவர்கள் கொரோனா நோயால் மறைந்தார்கள் .ஆனால், அதை ஏற்காத அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், நான் வதந்தி பரப்புவதாகவும், என் மீது வழக்கு தொடருவேன் என்று கூறினார்.

தற்போது அமைந்துள்ள கழக ஆட்சியில், முதலமைச்சர், கொரோனாவால் பலியான மருத்துவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். ஒன்றிய அரசின் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் ஏற்கவும் பாராட்டவும் தயாராகவுள்ளோம். ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில் முன்பை விட இன்னும் வேகமாக அதனை சுட்டிக்காட்டுவோம் விமர்சிப்போம் என்றார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னை மாநகரை மேம்படுத்த எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.

Related Stories:

More
>