×

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் ஓ.பி.சி வகுப்பினருக்கு 69% ஒதுக்க கோரிய வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு

சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய ஒன்றிய மற்றும் மாநில சுகாதார துறை செயலாளர்கள், மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டார்.

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடும்போது, ஒன்றிய அரசு கூறும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கும் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கும் வித்தியாசம் உள்ளது. சமீபத்தில் அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தத்தில் பிற்படுத்தப்பட்டோரை கண்டறிய மாநில அரசுகளுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டுமே தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். நீண்ட போராட்டங்களுக்கு பின் கிடைத்த இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு பறிக்க கூடாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : All India , Judgment on the 25th in the case of requesting 69% allotment for OBC class in All India allotted seats in medical courses
× RELATED மராட்டியத்தில் இந்தியா கூட்டணி...