காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு ஆராய நிபுணர் குழு; தமிழக அரசு அரசாணை வெளியீடு: 4 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த குழு 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி படுகையில் உள்ள டெல்டா பகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் நெல் விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மத்திய அரசின் அனுமதி பெற்று மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. நிலமும், நிலத்தடி நீரும் மாசுபடுவதை சுட்டிக்காட்டி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள்,    திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், காவிரி படுகையில் மேலும் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பதற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அத்துடன், எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் பி 2 வகை திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துகளை அறிய வேண்டிய அவசியம் இல்லை எனவும்  மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இது விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த பிப்.9ம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என அறிவித்தார். இதற்கென சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி உருவாக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், இனி காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படாது என்று கூறப்பட்டது.

ஆனால் ஒன்றிய எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த ஜூன் 13ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்காக ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும்.

எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப்பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது. தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிபடக் கூற விரும்புகிறேன்,’என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் பேராசிரியர்கள் இந்துமதி எம். நம்பி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் மகேஷ்வரி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முன்னாள் மூத்த இயக்குனர் செல்வம்,  திருச்சி மண்டல நீர்வள தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, டிட்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 6 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தியதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயும்.

குறிப்பாக, நிலத்தடி நீர், மண்வளம், நீர்பாசன ஆதாரங்கள், பயிர்களின் சாகுபடி, காற்றின் தரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும். மேலும், மீத்தேன், ஷெல் கேஸ் திட்டத்திற்காக நிலத்தில் பெரிய அளவு துளையிடுவதால் நிலத்தடி நீர் குறைய வாய்ப்புள்ளதா மற்றும் நிலத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா என்பது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்யும். இதேபோல், காவிரி டெல்டா பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்து 4 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்டாவில் 274 இடங்களில் அனுமதி

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்களுக்கு திருவாரூர், நாகை,, தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் உள்பட 274 இடங்களில் புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. இதில் ஓஎன்ஜிசிக்கு மட்டும் 104 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 274ல் 150 இடங்களுக்கு மேல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ளது.

Related Stories:

>