விவசாயிகள், வியாபாரிகள் கூடுதல் பணம் செலவிடுவதாக விரக்தி 5 கிலோ மீட்டரில் கடக்கும் தூரத்தை 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம்: அகரம்சேரி பாலம் அமைக்க 40 ஆண்டுகாலமாக கோரிக்கை

ஆம்பூர்:  5 கிலோமீட்டரில் கடக்கும் தூரத்தை 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலநிலையாக உள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் கூடுதலாக பணம் செலவிடவேண்டியுள்ளதாக விரக்தியடைந்துள்ளனர். எனவே 40 ஆண்டுகால கோரிக்கையான அகரம்சேரி பாலம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் அகரம்சேரி, பள்ளிகுப்பம், கொல்லகுப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் இணைக்கப்பட்டன. மழைகாலங்களில் பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் சூழலில் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய, அரசு துறை சார்ந்த பணிகளுக்காக குடியாத்தத்திற்கு செல்ல பள்ளிகொண்டா வழியாக செல்ல வேண்டும். மாதனூர் அடுத்த அகரம்சேரி பாலாற்றில் பாலம் அமைக்கப்பட்டால் சுமார் 5 கிமீ பயணத்தில் குடியாத்தத்திற்கு ெசன்றுவிடலாம். ஆனால், சுமார் 15 கிமீ தூரம் கடந்து செல்வதுடன் நேரம் மற்றும் பணமும் செலவாகிறது. இந்த பாலம் அமைத்தால் அகரம்சேரி, பள்ளிகுப்பம், சின்னசேரி, கூத்தம்பாக்கம், கொல்லகுப்பம், அக்ரஹாரம், அகரம், தோளப்பல்லி, பட்டு, ஒலக்காசி, கொத்தகுப்பம், புதூர், நத்தம், மேல் ஆலத்தூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

அதோடு, விவசாய பொருட்கள், விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சி மருந்து, இயந்திரங்களை வாங்க கூடுதலாக 15 கி.மீ பயணக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக அடிப்படை பொருட்களின் விலை உயர்வதால் பிற பகுதிகளில் இருந்து வரும் விவசாய பொருட்களின் விலையுடன் போட்டியிட இயலாத நிலையில், போதிய வருமானமின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், வேலூர் மாவட்டத்தில் அகரம்சேரி, சுப்பநாயுடு பாளையம் கிராமங்களில் உற்பத்தியாகும், பாய். அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து நர்சரிசெடிகள், கொய்யா, மாம்பழம் உள்ளிட்டவை ஆந்திரமாநில உணவு கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு குடியாத்தம் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி தொழில்நகரமாக விளங்கும் ஆம்பூருக்கு குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த பாலாற்றின் வழியாக கடந்து சென்று தேசியநெடுஞ்சாலை மூலம் ஆம்பூர் செல்கின்றனர். மழை காலங்களில் இவர்கள் குடியாத்தத்தில் இருந்து பள்ளி கொண்டா வழியாக வர வேண்டிய நிலை உள்ளது.

பொதுமக்களின் 40 ஆண்டு கோரிக்கையை அறிந்த வேலூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் சண்முக சுந்தரம் இப்பகுதியில் பாலாறு பாலம் அமைக்க ஆய்வு செய்தார். 42 கோடியில் பாலாறு பாலம் அமைக்க திட்டம் தயாரிக்கும் பணி துவங்க உள்ளதாக அப்பகுதியினருக்கு வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால், தற்போது வரையில் அதற்கான பணிகள் ஏதும் தொடங்கியதாக தெரியவில்லை. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்ைகயை ஏற்று, திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மூலம் தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே 40 ஆண்டுகால கோரிக்கையாக உள்ள மாதனூர் அடுத்த அகரம்சேரி பாலத்தை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், விவசாயிகளின் போக்குவரத்து செலவினை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>