×

நெல்லையில் இருந்து குமரிக்கு பரவியது வாழையை தாக்கும் பனாமா வாடல் நோய்

இந்நோய் ஏற்படுத்தும் பூஞ்சாணம் மண்ணின் மூலம் பரவுகின்றது. பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உள்ளே புகுந்துவிடும்.  அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய் தாக்கம் அதிகம். இப்பூஞ்சைகள்,  கன்றுகள், கிழங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசனநீர்  போன்றவற்றின் வழியே பரவுகின்றது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை சாகுபடி முக்கிய இடம் பெறுகிறது. மாவட்டத்தில் சராசரியாக 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி நடப்பது வழக்கம். இந்த வருடம் பேரிடரால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதில் அதிக அளவு ஏத்தன் வாழைசாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மட்டி, செவ்வாழை, சிங்கன் வாழை ரகங்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைச்சலாகும் வாழைதார்கள் கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. மேலும் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வேறு மாவட்டம், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆண்டிற்கு ₹10 கோடி அளவிற்கு வாழை மூலம் வர்த்தகம் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் வாழையில் இலைபுள்ளி நோய் மற்றும் வண்டு தாக்குதலால் ஏற்படும் நோய்கள் அதிக அளவு காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த ரஸ்தாளி வகை வாழையில் பனாமா வாடல் நோய் கண்டறியப்பட்டது. நெல்லையில் பரவலாக காணப்பட்டு வந்த பனாமா வாடல் நோய் குமரி மாவட்டத்தில் கடந்த வருடம் வரை இல்லை.

 ஆனால் தற்போது குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பனாமா வாடல் நோய் வாழையை தாக்க தொடங்கியுள்ளது. இதற்கு , நெல்லை மாவட்டத்தில் உள்ள வாழை கன்றுகளை விவசாயிகள் வாங்கிவந்து குமரி மாவட்டத்தில் நடவு செய்வதே காரணம் என கூறப்படுகிறது. பனாமா நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாழையின் இலையின் அடிப்புறத்தில் குறிப்பாக இலை ஓரங்களில் மஞ்சள் நிறமாற்றத்துடன் இலை வாடி காணப்படும். பின்பு இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி வரை பரவி ஓரங்கள் காய்ந்துபோகும். பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக் காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும். அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிறமாற்றம் வட்ட வடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக் குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும். தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிறமாற்றம் தெரியும்.

  இந்நோய் ஏற்படுத்தும் பூஞ்சாணம் மண்ணின் மூலம் பரவுகின்றது. பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உள்ளே புகுந்துவிடும். அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய் தாக்கம் அதிகம். இப்பூஞ்சைகள், கன்றுகள், கிழங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசனநீர் போன்றவற்றின் வழியே பரவுகின்றது. பாதிக்கப்பட்ட மரத்தை வேருடன் அழித்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்தை அகற்றி தீ வைத்து எரித்த பின்பு அதே குழியில் 1-2 கிலோ சுண்ணாம்பு இட வேண்டும். கிழங்கின் மேற்பகுதி மண்ணிற்கு வெளியில் தெரியும்படி மண்ணை நீக்க வேண்டும். பின்பு 45 டிகிரியில் 10 செ.மீ ஆழத்தில் கிழங்கின் மேல் துளையிட்டு 60 கிராம் கார்பன்டசிம் காப்சியூல் அல்லது 2 சதவீதம் கார்பன்டசிம் (20 கிராம் 1 லிட்டர் நீரில்) ஊசி மூலம் நடவுசெய்த 2வது, 4வது மற்றும் 6வது மாதங்களில் கிழங்கில் உட்செலுத்துவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ஒன்றியம் வாரியாக .....
அகஸ்தீஸ்வரம் 328  ஹெக்டேர், ராஜாக்கமங்கலம் 240 , குருந்தன்கோடு 575 ,  மேல்புறம் 295 , முஞ்சிறை 409 , கிள்ளியூர் 485 ,  தக்கலை 1071 , திருவட்டார் 457 , தோவாளை 782 ஹெக்டேர் என  மொத்தம் 4642 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிக லாபம் பெற...
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் வருடம் முழுவதும் உழைத்து உற்பத்தி செய்த வாழை தார்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்க வேண்டுமானால் காய்களை நல்லமுறையில் பராமரிப்பது அவசியம். வாழை மரத்திலிருந்து தார் வெளி வந்ததும் தாருக்கு உறையிடுதல் மிகுந்த பலனளிக்கிறது.

வாழைத்தார் உறைகள் பெரும்பாலும் வெண்மை நிறத்திலும், இளம் நீல நிறத்திலும் கிடைக்கின்றன. வாழைத் தாருக்கு உறையிடுவதால் காய்கள் சீராக வளைந்து, வேகமாக முற்றிவிடுவதால் 7 -10 நாட்கள் முன்கூட்டியே அறுவடை செய்யலாம். பூச்சிகள், நோய்தாக்குதல், மிக அதிகப்படியான வெப்பம் மற்றும் குளிர் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது. அத்துடன், பறவைகளினால் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. காய்களின் சீரான, துரிதமான வளர்ச்சி மற்றும் 15 முதல் 20 சதவீதம் கூடுதல் எடையும், கூடுதல் விலையும் மற்றும் லாபமும் கிடைக்கும்.

50 சதவீதம் மானியத்தில் வாழைத்தார் உறை
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் 2020- 21 ம் நிதியாண்டின் கூடுதல் இலக்காக வாழைத்தார் உறையிடுவதற்கு ஹெக்டேருக்கு 50 சதவீதம் மானியமாக ₹12500 பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ள விவசாய பெருமக்கள் உழவன் செயலி மூலமாக முன்னுரிமை பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.

களப்பணி செய்ய வேண்டும்
விவசாயி செண்பகசேகரபிள்ளை: நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரிக்கு அதிக அளவு வாழை தார்கள் விற்பனைக்கு  வருகிறது. குமரி மாவட்டத்தில் தடிக்காரண்கோணம், அருமநல்லூர், சுருளகோடு, துவரங்காடு, தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கிய இடத்தை ஏத்தன் வாழை பிடிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் வாழை கன்றுகள் குறைந்த விலையில் கிடைப்பதால், குமரி விவசாயிகள் நெல்லையில் இருந்து ஏத்தன் வாழைகன்றுகளை வாங்கி  சாகுபடி செய்து வருகின்றனர்.

பனாமா வாடல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாழையின் இலைகள் கருகி முறிந்துவிழுந்துவிடும். இதனால் வாழைக்கு தேவையான பச்சையம் கிடைக்காமல் முழுவளர்ச்சி பெறாமல் வாழை இடையில் முறிந்துவிடும். குலைதள்ளிய வாழையை இந்த பனாமா வாடல் நோய் தாக்கும்போது போதிய பச்சையம் கிடைக்காமல் காய்கள் பருமன் அடையாது. இதனால் விவசாயிகளுக்கு  நஷ்டம் தான் ஏற்படும். வட்டார அளவில் உள்ள தோட்டக்கலைதுறை அதிகாரிகள் களப்பணி மேற்கொண்டு அந்தந்த கால நிலையில் எந்த நோய் தாக்கும் என விவசாயிகளிடம் எடுத்துக்கூறி அதற்கான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

Tags : Panama blight, a banana-borne disease that has spread from Nellai to Kumari
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி