கடும் காய்ச்சல்!: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி..!!

சண்டிகர்: ஒலிம்பிக்கில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அப்போது நீரஜ் சோப்ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறினார். தற்போது அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவர், டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், நீரஜ் சோப்ராவும் முகக்கவசங்களின் அருகருகே நின்று பேசி கொண்டிருந்தனர். தற்போது நீரஜ் சோப்ராவுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டோக்கியோவிலிருந்து திரும்பிய பின்னர் ஓய்வின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் கூட காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா திரும்பிய அவர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். சமூக வலைதளங்களிலும்  பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் முதல் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று சரித்திரம் படைத்தார். மேலும் தனி நபர் பிரிவில் அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் இரண்டாவது தங்கம் வெல்லும் இந்தியர் என்ற பெருமையும் அவரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>