சென்னை எழும்பூரில் உருவாகி வரும் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்!: காவல் வாகனம், துப்பாக்கி, மீட்கப்பட்ட பொருட்கள் பொக்கிஷமாக காட்சி..!!

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள 178 ஆண்டு பழமை வாய்ந்த முன்னாள் காவல் ஆணையர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் 1742ம் ஆண்டு சொகுசு பங்களவாக இருந்த கட்டிடம் 1756ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகமாக மாற்றப்பட்டது. ஆனால் இட பற்றாக்குறை மற்றும் நவீன வசதிக்காக ஆணையர் அலுவலகம் 2017ம் ஆண்டு வேப்பேரியில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து எழும்பூரில் உள்ள பழைய கட்டிடம் 7 கோடி ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை காவலர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், காவலர்களின் சிறப்பு, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், காலத்துக்கும் மறக்க முடியாத சம்பவங்களின் புகைப்படங்கள் என காவலர்களின் வரலாற்றை விவரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்வதற்காக காவல்துறை பற்றிய வரலாற்று சார்ந்த பல விஷயங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

மெரினா கடற்கரையில் ரோந்து பணிக்காக காவலர்கள் பயன்படுத்திய 4 சக்கர வாகனம், உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்திய அந்த கால சொகுசு வாகனம் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் நம்மை வரவேற்கின்றன. உள்ளே 1982ல் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சென்னை காவல்துறையினர் கைது செய்த புகைப்படம், பிரதமர் ராஜீவ் காந்தி கடைசியாக சென்னை வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், சந்தனக்கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டதும் காவல்துறை அதிகாரி விஜயகுமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் என்று காலத்துக்கும் மறக்க முடியாத பல விஷயங்கள் புகைப்படங்களாக நம் கண்கள் முன் விரிகின்றன.

அருகாட்சியகத்தின் உள்ளே பல்வேறு மூல பொருட்களால் ஆன வெடிமருந்துகள், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை கண்டறிவதற்கு காவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் புலனாய்வு உபகரணங்கள் என ரகரகமான உபகரணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து 1918ல் இருந்து தற்போது வரை காவலர்கள் பயன்படுத்திய அனைத்து ரக துப்பாக்கிகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் 1939ம் ஆண்டில் இருந்து காவலர்களுக்கு வழங்கப்பட்ட உயரிய பதக்கங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் காவல்துறையால் மீட்கப்பட்ட பண்டைய கால வாள்கள் மற்றும் சிலைகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர காவலர்கள் பயன்படுத்தும் பேண்ட் வாத்தியங்கள் உட்பட காவல்துறையினர் பயன்படுத்தும் பல பொருட்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பலகோடி ரூபாய் மதிப்பில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை எழுப்பூரில் தயாராகி வரும் இந்த காவலர் அருங்காட்சியகம் ஒருசில மாதங்களில் மக்கள் பார்வைக்கு வரவுள்ளது.

Related Stories:

>