×

நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

* ஒரே ஆண்டில் ரூ.265 அதிகரிப்பு
* சென்னையில் ரூ.875.50க்கு விற்பனை
* இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி



சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.25 அதிகரித்தது. இதனால் சென்னையில் சமையல் காஸ் விலை ரூ.875.50 ஆனது. ஒரே ஆண்டில் காஸ் சிலிண்டர் விலை ரூ.265 அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.694 ஆகவும், சென்னையில் ரூ.710 ஆகவும் இருந்தது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் 3 முறையாக ரூ.100ம், மார்ச் மாதம் ஒரு முறை ரூ.25ம் உயர்த்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.10 குறைத்தனர். பிறகு மே, ஜூன் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், கடந்தமாதம் (ஜூலை) ரூ.25 உயர்த்தினர். அடுத்து இம்மாதத்திற்கான (ஆகஸ்ட்) காஸ் சிலிண்டர் விலை, கடந்த 1ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அப்போது 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.74 அதிகரித்தனர். இதனால், கடந்த 16 நாட்களாக காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.850.50 ஆகவும்,  டெல்லி, மும்பையில் ரூ.834 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.861 ஆகவும் விற்கப்பட்டது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று, திடீரென வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.25 அதிகரித்தும், வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.4.50 குறைத்தும் அறிவிப்பு வெளியிட்டது. இதனால், சென்னையில் ரூ.875.50 ஆகவும், சேலத்தில் ரூ.893.50 ஆகவும், டெல்லி, மும்பையில் ரூ.859 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.886 ஆகவும் அதிகரித்தது. நேற்று காலை முதல், இப்புதிய விலையில் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டன.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ரூ.610.50க்கு விற்கப்பட்டது. அதுவே தற்போது ரூ.875.50 ஆக அதிகரித்து, ஒரே ஆண்டில் ரூ.265 அதிகரித்துள்ளது. இந்தாண்டின் 7 மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.165.50 உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் இதேபோல், மாதத்தின் இடையில் விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. அந்த மாதத்தில் மட்டும் 3 முறை விலையை ஏற்றி ரூ.100 அளவிற்கு உயர்த்தினர். அதேபோல், தற்போது இம் மாதத்தின் இடைப்பட்ட பகுதியில் விலையை அதிகரித்துள்ளனர். இதனால், மேலும் விலையில் ஏற்றம் ஏற்படுமோ? என்ற அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டரை பொருத்தளவில், கடந்த 1ம் தேதி ரூ.74 அதிகரித்த நிலையில், நேற்று ரூ.4.50 குறைத்துள்ளனர். இதனால், சென்னையில் ரூ.1,757ல் இருந்து ரூ.1,752.50 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைத்திட வேண்டும்.

ஆனால், அந்த நேரங்களில் ஒன்றிய அரசு, விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் நிலையாக வைத்துக் கொண்டு, கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்கவும், விலையை ஏற்றுகின்றனர். இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலையேற்றம் பற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

மானியம் படிப்படியாக நிறுத்தம்
காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்படும் நிலையில், அதற்கான ஒன்றிய அரசின் மானியத்தொகை என்பது ரூ.40 என்ற நிலையில் உள்ளது. இந்த மானியமும் பெரும்பாலான நுகர்வோர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எண்ணெய் நிறுவனங்கள், மானிய சிலிண்டர் விலையை வெளிப்படையாக அறிவிப்பதை கடந்த 2 ஆண்டுக்கு முன் நிறுத்திக் கொண்டன. மேலும், நுகர்வோர்களின் வங்கி கணக்கில் மானியம் செலுத்தப்படுவது படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாதம்        டெல்லி    கொல்கத்தா     மும்பை    சென்னை
ஜனவரி        ரூ.694    ரூ.720.50    ரூ.694    ரூ.710
பிப்ரவரி(25ல்)    ரூ.794    ரூ.820.50    ரூ.794    ரூ.810
மார்ச்        ரூ.819    ரூ.845.50    ரூ.819    ரூ.825
ஏப்ரல்        ரூ.809    ரூ.835.50    ரூ.809    ரூ.825
மே        ரூ.809    ரூ.835.50    ரூ.809    ரூ.825
ஜூன்        ரூ.809    ரூ.835.50    ரூ.809    ரூ.825
ஜூலை        ரூ.834    ரூ.861        ரூ.834    ரூ.850.50
ஆகஸ்ட் (17ல்)    ரூ.859    ரூ.886        ரூ.859    ரூ.875.50

Tags : Gauss , Gas cylinder, price hike, crude oil
× RELATED பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை...