×

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ரூ.76.65 கோடி சொத்து குவிப்பு புகார்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பியதாக அறப்போர் இயக்கம் பேட்டி

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது, ரூ.76.65 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பி உள்ளதாக, அந்த இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னையில் அறப்போர் இயக்கத்தினர், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை எம்எல்ஏவாக இருந்தார். மேலும் அவர் 2016 முதல் 2021 வரை வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சராகவும் இருந்தார். மேலும், கல்வி, விளையாட்டு, தமிழ் மொழி மற்றும் கலாசாரம், மற்றும் சுகாதாரத் துறை போன்ற துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார். 2011ல் வீரமணி, அவரது குடும்பத்தாரின் நிகர சொத்து மதிப்பு 7.48 கோடி. ஆனால், 2011 முதல் 2021 வரை அவர் மற்றும் அவர் குடும்பத்தாரின் சொத்து மதிப்பு ரூ.91.2 கோடி.

2011 முதல் 2021 வரை அவர் வாங்கிய கடன்களை கழித்தால், அவர் சேர்த்த நிகர சொத்து ரூ.83.05 கோடி. மேலும், இந்த 10 ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமிப்பு செய்தது அதிகபட்சமாக ரூ.7 கோடி. எனவே அவர் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும், குடும்பத்தார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து ரூ.76.65 கோடி ஆகும்.  மேலும் பல நிலங்கள் முன்னாள் அமைச்சர் தனது தாயார் மணியம்மாள், சகோதரி தன்மானம் சுதா சுஷீலா பெயரில் வாங்கி அதே நாளிலோ அல்லது சில மாதங்களுக்கு பின்னரோ தன் பெயருக்கு தான பத்திரம் மூலம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் தனது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் 2015 ல் வாங்கப்பட்டது. அதே வருடம் முன்னாள் அமைச்சரின் ஆர்.எஸ்.கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றிக்கொண்ட ஆதாரத்தையும் இணைத்துள்ளோம்.

இப்படி முன்னாள் அமைச்சர் தன் உறவினர்களை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சேர்த்த ஆதாரங்களையும் இணைத்துள்ளோம். ஒட்டுமொத்தத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவர் குடும்பத்தினர் 2011ல் வெறும் ரூ.7.48 கோடி சொத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சமாக ரூ.76.65 கோடி வருமானத்திற்கு மீறிய சொத்தை சட்ட விரோதமாக குவித்துள்ளனர். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி உள்ளது. எனவே உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை இந்த புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் பிற குற்றவியல் சட்டங்களில் முதல் கேட்டுக்கொண்டுள்ளோம்.  
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

99 ஆண்டுக்கு குத்தகை
முன்னாள் அமைச்சர் வீரமணியின் பெயரில்  உள்ள அசையும் சொத்து மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் ரூ.43 கோடி அதிகமாகி  உள்ளது. மேலும் அவர் பெயரிலும், குடும்பத்தார் பெயரிலும் பல அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. பெங்களூர், சென்னை, திருப்பத்தூர் என்று பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்துக்கள் வாங்கி உள்ளார். ஓசூர்  சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்திற்கு வெறும் ஒரு ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் ரூ.100 ரூபாய்க்கு 0.1 ஏக்கர் நிலம் அமைச்சரின் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் பாப்ரிகேட்டர்  பிரைவேட் லிமிடெட்டுக்கு 2017ல் சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் ரூ.15 கோடி செலவில் ஹோட்டல் ‘‘ஓசூர் ஹில்ஸ்’’ கட்டப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,minister ,KC Veeramani , AIADMK, Former Minister, KC Veeramani, Complaints of Accumulation of Property, Anti-Corruption Department
× RELATED எடப்பாடி முன்னிலையில் தொண்டனுக்கு ‘பளார்’