மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வலியுறுத்தல்

மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும்,  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி  பழனிசாமி அரசின் கவனத்தை ஈர்த்து பேசியதாவது: சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மரவள்ளி  கிழங்கு பயிரிட்ட விவசாயிகளின் பயிர்கள் மாவுப்பூச்சியால்  பாதிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு:  தற்போது வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இப்படி எடுத்தவுடன் பேச  முடியாது. அமைச்சர் பதில் சொல்ல விரும்புகிறாரா என்று கேட்டு தெரிந்த  பின்னர் தான் அவையில் பேச அனுமதிக்க முடியும். (இதையடுத்து அமைச்சர் இந்த பிரச்னைக்கு பதில் அளிக்க தன்னிடம் விவரம் உள்ளது என்று கூறினார்.) எடப்பாடி பழனிசாமி:  இந்த மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கினை நம்பி 470 ஆலைகள் உள்ளன. 1  லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.1,500 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது. மரவள்ளி கிழங்கு பயிரின் முக்கிய எதிரி மாவுப்பூச்சி ஆகும். மாவுப்பூச்சியின் தாக்குதலால் மரவள்ளி கிழங்கு அதிக அளவு  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

வேளாண்  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: இந்த மாவுப்பூச்சியானது ஆப்பிரிக்க  நாடுகளில் இருந்து 2020ம் ஆண்டு கேரளா, தமிழகத்தில் ஊடுருவியுள்ளது. கடந்த  ஆண்டு நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது பரவி உள்ளது. இதுபற்றி கடந்த வாரம் நீங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள்.

இதுபற்றி செய்தித்தாளில் பார்த்தவுடன் நடவடிக்கை எடுக்க  ஆரம்பித்துவிட்டோம். சம்பந்தபட்ட பகுதிகளுக்கு வேளாண் அதிகாரிகள்,  விஞ்ஞானிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவுப்பூச்சியை குறைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று  மருந்து தெளிக்க வேண்டும். முழுவதுமாக நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>