ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை: சபாநாயகர் இருக்கையை அதிமுக எம்எல்ஏக்கள் முற்றுகை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வேளாண்மைத்துறை பட்ஜெட் மீதான விவாதத்தில் மணப்பாறை அப்துல் சமது (மமக) பேசியதாவது: கடந்த ஆட்சியில் அரிசி விநியோகம் மோசமாக இருந்தது. தரமற்ற, உண்ண தகுதியற்ற நிலையில் அரிசி இருந்தது. நியாய விலை கடை அரிசியை அதிகமாக பயன்படுத்தும் அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் பகுதி தான் மணப்பாறை தொகுதி. பெரும்பாலான பகுதிகளில் தரமான அரிசி கிடைக்கிறது. ஒரு சில கடைகளில் பழைய அரிசி இருப்பு இருக்கிறது. தரமான அரிசி அந்த மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(அப்போது அதிமுக உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாற்று சபாநாயகர் அன்பழகன், அடுத்து உங்கள் உறுப்பினர் தான் பேசப்போகிறார். அப்போது உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று கூறினார். ஆனாலும், தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால், சில நிமிடங்கள் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.) தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

100 நாட்களிலேயே தரமான அரிசி வழங்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களையெல்லாம் அழைத்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளை வைத்து ஆய்வு நடத்தி, நல்ல முறையில் அரிசி வழங்க வேண்டும் என்று கூறினார். கடந்த காலங்களில் நடந்த டெண்டர்களில் என்னென்ன முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த டெண்டரை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒரு பருப்பு டெண்டரை ரத்து செய்ததில் ரூ.100 கோடி மிச்சமாகியுள்ளது.

நாங்கள், தனியார் அரிசி ஆலை அதிபர்களை  அழைத்து கூட்டம் நடத்தினோம். கடந்த காலத்தில் கருப்பு நிறமாகவும், நியாய  விலை கடைகளில் பழுப்பு நிறமாகவும் அரிசி இருந்தது. அதையெல்லாம் மாற்ற  வேண்டும் என்பதற்காக கலர்சார்ட்டர் பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.  அவர்கள் செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின், தரமான அரிசியை வழங்க வேண்டும். அதற்கு எந்த  நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>