2 கோடி பேர் பயன்பெறுவதால் பெட்ரோல் விலை குறைப்பு டீசல் விலையை குறைக்காதது ஏன்?.....நிதி அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று, 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் நிதிதிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா (அதிமுக) பேசியதாவது:  மதுரையில் பெரிய நூலகம் முழுவதும் டிஜிட்டல் நூலகமாக இருக்காமல் புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற வேண்டும். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: நூலகத்தில் கண்டிப்பாக புத்தகங்கள் இருக்கும்.  ராஜன் செல்லப்பா:  தற்போது தாக்கல் செய்த பட்ஜெட் புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் என்கிறார்கள். ஆனால் 2011ம் ஆண்டில் இருந்து பத்து ஆண்டுகள் அதிமுக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் கிடையாது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்:  கடந்த 15 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் 3 முறை பெட்ரோ-டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 4 முறை குறைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை கூறினால் நன்றாக இருக்கும். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சில சமயம் வரியை ஏற்றித்தான் ஆக வேண்டும். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கூட 1% வரியை உயர்த்திதான் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். ராஜன் செல்லப்பா: டீசல் விலையை குறைத்தால் விவசாயிகள் சந்தோஷப்படுவார்கள்.

பி.டி.ஆர்: யார் யார் பெட்ரோல் - டீசல் பயன்படுத்துகிறார்கள் என்ற முழு தகவல் இல்லை. வேறு வகையில் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி விவசாயிகள், மீனவர்கள், போக்குவரத்து துறை, தனியார் வைத்துள்ள பெரிய கார்கள் டீசலில் ஓடுகிறது. அதேநேரம் 2 கோடி பேர் பெட்ரோல் மூலம் 2 சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். மீனவர்களுக்கு டீசல் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையினருக்கும் மானியமாக டீசல் வழங்கப்படுகிறது. பெரிய சொகுசு கார்கள்தான் தனியார் வைத்துள்ளனர். அதனால் பெட்ரோல் விலை குறைத்தால் உறுதியாக அதிகமானோர் பயனடைவார்கள் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

லாரிகளுக்கு டீசல் மானியம் கொடுத்தால் நேஷனல் பெர்மிட் வைத்துக் கொண்டு இயங்கும் உரிமையாளர்களும் இதை தவறாக பயன்படுத்திவிட கூடாது. அதனால் எல்லாமே ஆய்வு செய்து தற்போது பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். டீசல் பயன்படுத்துபவர்களுக்கு வேறு வகையில் ஊக்கம் கொடுத்துள்ளோம்.

ராஜன் செல்லப்பா: சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி மீண்டும் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பி.டி.ஆர் :  ரூ.3 கோடியை முன்பு போல் தொகுதிக்காக செலவு செய்யலாம். தற்போது பேரிடர் காலத்தை நாம் தாண்டி விட்டோம்.

ராஜன் செல்லப்பா:  மதுரை மெட்ரோ ரயில் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதியாக செயல்படுத்தப்படும் என்று கூறப்பட வில்லை. பி.டி.ஆர்.: 2016ம் ஆண்டு நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஆக இருந்தபோது மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். 5 வருடத்திற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை இப்போது நிறைவேற்றுகிறோம். சாத்தியக்கூறுகள் பற்றி தற்போது ஆராயப்படும். அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்.

Related Stories:

>