88வது பிறந்த நாள் விழா முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை: ஏராளமான தொண்டர்களும் பங்கேற்பு

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று அவரது சிலைக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஏராளமான தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மறைந்த முரசொலி மாறனின் 88வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று காலை முரசொலி மாறன் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்பி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் சிற்றரசு, எம்எல்ஏ எழிலன், அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பு இணை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, வடசென்னை வக்கீல் அணி செயலாளர் மருது கணேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது தொண்டர்கள், ‘கலைஞர் புகழ் வாழ்க; அண்ணா புகழ் வாழ்க; முரசொலி மாறன் புகழ் வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன், மாநில துணை செயலாளர் எஸ்.வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல, தமிழகம் முழுவதும் கட்சி அலுவலகங்களில் முரசொலி மாறனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருக்குவளையில் திமுகவினர் மரியாதை

நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் இல்லத்தில் உள்ள முரசொலிமாறன் உருவச்சிலைக்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார்  நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் முரசொலிமாறன் உருவபடத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

More