×

அசாம்-மிசோரம் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

அஜ்வால்: அசாம், மிசோரம் எல்லையில் மோதல் நடந்து 3 வாரங்கள் முடிந்த நிலையில், அதே பகுதியில் நேற்று துப்பாக்கி சூடு நடந்ததால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம்-மிசோரம் இடையே எல்லை பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கிடையே, இம்மாநிலங்களின் எல்லையில் சர்ச்சைக்குரிய அய்ட்லாங் பகுதியில் கடந்த 26ம் தேதி இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் 6 அசாம் போலீசார் உள்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால், அமைதியான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண இரு தரப்பிலும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அசாம் எல்லைக்குட்பட்ட அய்ட்லாங் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். இது குறித்து மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்ட துணை கமிஷனர் கூறுகையில், ``அசாமின் கைலகண்டி மாவட்டத்தில் உள்ள வாரிங்டே பகுதியை சேர்ந்த 3 பேர், பிலாய்பூரில் உள்ள நண்பர் இறைச்சி வாங்குவதற்காக எல்லைப் பகுதிக்கு வர சொல்லி தொலைபேசி மூலம் அழைத்தததால் அங்கு சென்றது தெரிய வந்தது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி சுட்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார். உயிரிழப்பு எதுவுமில்லை,’’ என்று தெரிவித்தார். எல்லை மோதல் நடந்து 3 வாரங்கள் முடிந்த நிலையில், சர்ச்சைக்குரிய எல்லை பகுதியான அய்ட்லாங்கில் துப்பாக்கி சூடு நடந்திருப்பது எல்லையில் பதற்றத்தை மீண்டும் அதிகரிக்க செய்துள்ளது.

Tags : Assam ,Mizoram , Re-firing on Assam-Mizoram border
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி