×

ட்வீட் கார்னர்... வள்ளல் ஒசாகா!

ஜப்பான் டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா (23 வயது), களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமல்லாது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்துகளை மிகத் துணிச்சலாக வெளிப்படுத்தக் கூடியவர். இந்த ஆண்டு ஆஸி. ஓபனில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒசாகா, பிரெஞ்ச் ஓபனில் சம்பிரதாயமான செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னால் கலந்துகொள்ள முடியாது என அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடுமையான நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என கிராண்ட் ஸ்லாம் போட்டி நிர்வாகிகள் அச்சுறுத்தினர். அடுத்த நாளே மன உளைச்சல் காரணமாக பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒசாகா, விம்பிள்டன் தொடரிலும் பங்கேற்கவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்கவிழாவின்போது ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் கவுரவம் அவருக்கு வழங்கப்பட்டது. ஒலிம்பிக் தொடரில் 3வது சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்ட ஒசாகா, சின்சினாட்டி ஓபனில் களமிறங்குகிறார். செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்காமல் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இந்த நிலையில், ‘ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. சின்சினாட்டி ஓபனில் விளையாடுவதால் கிடைக்கும் பரிசுத் தொகை முழுவதையும் ஹைதி நிவாரணத்துக்காக அளிக்க உள்ளேன். இந்தப் பேரழிவில் இருந்து நாம் நிச்சயம் மீண்டு வருவோம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார். ஒசாகாவின் தந்தை ஹைதி நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Osaka , Tweet Corner ... Valal Osaka!
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி