×

ரூ.2 ஆயிரம் கோடி, 5 மாஜி அமைச்சர்களின் சொத்து ஆவணங்களுக்காக அதிமுக விஐபியின் உத்தரவால் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்தோம்: முக்கிய குற்றவாளி சயான் 3 மணி நேரம் பரபரப்பு வாக்குமூலம்

ஊட்டி: கொடநாடு பங்களாவில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 ஆயிரம் கோடி, 5 மாஜி அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்கச் சென்றபோதுதான், செக்யூரிட்டியை கொலை செய்ததாக, முக்கிய குற்றவாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பளவில் தேயிலை எஸ்டேட் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, 99 அறைகளை கொண்ட சொகுசு பங்களாவும் உள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கொடநாடு எஸ்டேட் ஒரு மினி தலைமை செயலகமாகவே செயல்பட்டு வந்தது. அடிக்கடி இங்கு வந்து ஓய்வு எடுக்கும் ஜெயலலிதா இங்கிருந்தே பல்வேறு அரசு பணிகளையும் மேற்கொண்டு வந்தார். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பல கோடி மதிப்பிலான வைரம், தங்க நகைகள், ரொக்க பணம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளதாக கூறப்பட்டது. இதனால், இந்த எஸ்டேட் எப்போதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்தேதி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இந்த எஸ்டேட் முழுமையாக சசிகலாவின் வசம் சென்றது.

இந்த காலக்கட்டத்தில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதால், சசிகலா தனித்து விடப்பட்டார். அதன்பின், இந்த எஸ்டேட்டில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் கொடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. இந்த கும்பல், பங்களாவிற்குள் நுழைந்தபோது, அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் தடுத்தார். இதனால், ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல், அவரை தாக்கி கொன்றது. பங்களாவிற்குள் நுழைந்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கும் அறைகளுக்குள் புகுந்து, பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகேயுள்ள ஆத்தூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதேநாளில், கேரள மாநில எல்லைக்குள் சயான் என்பவரது காரும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சயானின் மனைவி மற்றும் குழந்தை இறந்தனர். சயான் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். அதில் சயானும், கனகராஜூம் நண்பர்கள் என்பதும், கனகராஜ், ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்பதால் கொடநாட்டில் மர்மம் ஏதோ நடந்துள்ளது. அதனால்தான் அதில் தொடர்புடைய 2 விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியானது. இதற்கிடையில் காயமடைந்த சயானை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவன் கொடுத்த தகவலின்படி வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், சயான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இந்த வழக்கு விசாரணை, ஊட்டியில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சயான் உள்பட 10 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது, இந்த வழக்கில் அதிமுக விஐபி ஒருவருக்கு இந்த கொலை மற்றும் கொள்ளையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். இந்த பேட்டி, அப்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், ஒரு சில தினங்களிலேயே  சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த இரு ஆண்டுகளாக சிறையில் இருந்தபடியே சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் சயானுக்கு மீண்டும் ஜாமீன் கிடைத்தது. கடந்த 13ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல்கள் கனகராஜ் மற்றும் ஷாஜகான் ஆகியோர், கொடநாடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளி சயானும் தன்னை போலீசார் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் மனு அளித்தார்.

நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, மறு விசாரணைக்காக கோத்தகிரி போலீசார் சயானுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி, அவர் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகம் மற்றும் நில அபகரிப்பு பிரிவு அலுவலகம் வந்தார். அங்கு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி எஸ்பி ஆசிஸ் ராவத், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மாலை 3.30 மணிக்கு துவங்கி, 6.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.

சயனின் வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நான் கேரளாவைச் சேர்ந்தவன் என்றாலும், சேலத்தில் பேக்கரி நடத்தி வந்தேன். அப்போதுதான் எனக்கும் கனகராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக இருந்தோம். ஜெயலலிதா, கொடநாடு செல்லும்போதெல்லாம் கனகராஜ்தான் கார் ஓட்டுவார். இதனால் என்னை எடப்பாடி பழனிசாமி, வேலுமணியின் சகோதரர் அன்பரசன் ஆகியோர் வீட்டுக்கு கனகராஜ் அழைத்துச் சென்றுள்ளார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். இந்த நேரத்தில் கனகராஜ் எனக்கு போன் செய்தார். இதனால் நாங்கள் சேலத்தில் ஒரு இடத்தில் சந்தித்துப் பேசினோம்.

அப்போது, ஜெயலலிதாவின் பணம் ரூ.2 ஆயிரம் கோடி, 5 முக்கிய அமைச்சர்களின் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளன. அதை எடுத்து வரவேண்டும் என்று முக்கிய விஐபி கூறியுள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து ரவுடிகளை அழைத்து வாருங்கள். நாம் கொடநாடு செல்லும்போது மின்சாரம் துண்டிக்கப்படும். நான் செக்யூரிட்டிக்கு தெரியாமல் அல்லது செக்யூரிட்டியை கட்டிப்போடு உள்ளே சென்று கொள்ளையடித்து விட்டு வரவேண்டும் என்றார். இதற்காக நாங்கள் காரில் சென்றோம். அப்போதுதான் செக்யூரிட்டி தடுத்ததால் வாளையார் மனோஜ், ஒரு செக்யூரிட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டார். மற்றொருவரை தாக்கிவிட்டு உள்ளே சென்றோம்.

கனகராஜ் சொன்னபடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர், உள்ளே சென்றோம். பணத்தை கனகராஜ்தான் எடுத்து வாகனங்களில் ஏற்றினார். சொத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டார். சில விலை உயர்ந்த பொருட்கள், குறிப்பாக ஜெயலலிதாவின் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை நாங்கள் எடுத்துக் கொண்டோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றோம். எங்களுக்கு பேசியபடி சில லட்சங்களை கொடுத்தனர். ஆனால் கனகராஜை கொன்றதுபோல என் குடும்பத்தையும் கொன்று விட்டனர். ஆனால், நான் தப்பி பிழைத்தேன். இதனால்தான் இந்த உண்மைகளை கூறுகிறேன்.

அதிமுகவில் உள்ள மூத்த தலைவர் மற்றும் அதிகாரத்தில் இருந்தவர் பெயரை கனகராஜ் சொன்னார். அதனால்தான் நாங்கள் செய்தோம். இவ்வாறு சயான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அவனிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்பின்னர் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம். அதன்பின்னர்தான் சயான் வாக்குமூலம் அளித்ததுபோல, அதிமுக விஐபியின் தொடர்பு குறித்து ஆதாரங்களை கைப்பற்றி, அவரிடம் விசாரணை நடத்த முடியும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : AIADMK ,Kodanadu , AIADMK VIP orders robbery of Kodanadu bungalow for Rs 2,000 crore property documents of 5 ex-ministers
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...