மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடந்தது. இன்று (ஆக.17) காலை 11 மணிக்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலில் சிவகங்கை எஸ்டேட் ஆவியூர் கட்டளை மண்டபத்தில் வளையல் விற்ற லீலை, கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் நடந்தது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தேரஸ்வரருக்கு பட்டாபிஷேகம் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.

மீனாட்சிகோயிலில் காலையில் ஆடி வீதியில் வீதியுலா நடந்தது. தங்கப்பல்லக்கில் சுவாமி, அம்மன் வலம் வந்தனர். மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி ஆட்சியும், ஆவணியில் இருந்து பங்குனி வரை சுவாமி சுந்தரேஸ்வரர் ஆட்சியும் நடைபெறுவதாக ஐதீகம். அதன்படி  சுந்தரேஸ்வரர் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். சுந்தரேஸ்வரரிடம் இருந்து கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலைப் பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரர் திருக்கரத்தில் சேர்ப்பார்.

இன்று நடந்த சுந்தரேஸ்வரர் வளையல் விற்ற லீலை திருவிளையாடல் குறித்து மீனாட்சி கோயில் பட்டர்கள் கூறியதாவது: குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவரது சீடர்களில் சித்தன் என்பவன் தீய குணங்கள் கொண்டவன். பயிற்சி முடித்து சென்ற அவன் தானும் ஒரு பயிற்சி பள்ளி அமைத்து ஆசிரியரின் மாணவர்களை எல்லாம் அங்கு அழைத்துக் கொண்டான். அதோடு ஆசிரியரின் மனைவியிடமும் தவறாக நடக்க முயற்சித்தான். இதனை அவள் சுவாமி சுந்தரேஸ்வரரிடம் முறையிட்டாள்.

சுந்தரேஸ்வரர் ஆசிரியர் வேடத்தில் சித்தனை வாள்போருக்கு அழைத்து, ஆசான் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் காத்துக் கொள் எனக்கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டி இறுதியாக அவன் தலையையும் வெட்டிக் கொன்றார். இச்செய்திகளை அறிந்த குலோத்துங்க பாண்டியன் ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார் என்பதுதான் இதன் வரலாறு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>