×

டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதம்..!

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான், இன்று தலிபான்களின் கட்டுக்குள் சென்றுவிட்டது. தலிபான்களை பொருத்தமட்டில் மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களில் நம்பிக்கை உடையவர்கள் என்று சர்வதேச சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். தீவிரவாத நம்பிக்கை உள்ளவர்களிடம்  நாடு சென்றுள்ளதால், ஐ.நா உட்பட பல நாடுகளும் கவலை தெரிவித்து வருகின்றன.

மேலும், அரசியல் அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, புதிய அரசை ஆப்கானில் தலிபான்கள் கட்டமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அதிபர் பதவிக்கு தலிபான்களின் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தோஹாவிலும் உள்ளார். புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த மூத்த தலிபான் தலைவர்கள் இன்று தோஹாவிலிருந்து காபூலுக்கு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  சீனா, ரஷ்யா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் புதிய தலிபான் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

மேலும், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை காபூலில் உள்ள தங்களது தூதரகத்தை காலி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தற்போது ஆப்கன் நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில்  தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.


Tags : Modi ,Cabinet Committee for Security ,Delhi ,Afghanistan , Prime Minister Narendra Modi's urgent consultation with the Cabinet Committee on Defense in Delhi: Discussion on the situation in Afghanistan ..!
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...