×

நெல்லை ரயில் நிலையத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் தாமதம்: பயணிகள் வழுக்கி விழுந்து காயத்தால் அவதி

நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முதலாவது பிளாட்பார்மில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. மதுரை கோட்டம் டைல்ஸ் பதிக்கும் பணிகளை 15 தினங்களுக்குள் முடித்திட உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் காலக்கெடு தாண்டி டைல்ஸ் பதிக்கும் பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. இப்பணிகள் காரணமாக பளபளவென காணப்படும் தரையிலும், சிமென்ட், சாந்து ஆகியவை காணப்படும் பகுதிகளிலும் பயணிகள் அடிக்கடி வழுக்கி விழுகின்றனர். ரயில் வந்தவுடன் பல பயணிகள் பெட்டிகளை தேடி கொண்டு ஓடும்போது கால் இடறி கீழே விழுகின்றனர்.

கடந்த வாரத்தில் ஒரு பயணி கீழே விழுந்து ரயில்பெட்டியின் மீது மோதி நின்றார். மற்றொரு பெண் பயணி நெல்லை எக்ஸ்பிரசில் ஏற முற்பட்டபோது, கீழே வழுக்கி விழுந்து தலையில் ரத்த காயத்தோடு, பயணத்தையே ஒத்தி வைத்தார். அரைகுறையாக நிற்கும் டைல்ஸ் பதிக்கும் பணிகள் பயணிகளை அடிக்கடி பரிசோதித்து வருகிறது. இதுதவிர முதலாவது பிளாட்பார்ம் முழுவதும் பல்ேவறு இடங்களில் கிரஷர் பொடிகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் காற்றில் கிரஷர் பொடி பறந்து பயணிகள் அமரும் இருக்கைகளை தூசி மயமாக்குகிறது. ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்தால், உடைகள் அனைத்தும் சிமென்ட் கலரில் மாறிவிடுகின்றன.

இதனால் பயணிகள் ஆங்காங்கே நின்று கொண்டு ரயிலை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். பகல் நேரத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடப்பதால், முதலாவது பிளாட்பார்மில் பகலில் வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- சென்னை, அந்தியோதயா உள்ளிட்ட 5 ரயில்கள் 2வது பிளாட்பார்மிற்கு மாற்றிவிடப்பட்டுள்ளன. இதனால் மாற்று திறனாளிகளும், பெண்களும் சிரமத்தோடு 2வது பிளாட்பார்மிற்கு செல்ல வேண்டியதுள்ளது. எனவே ரயில் நிலையத்தை மெருகூட்டும் டைல்ஸ் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

Tags : Paddy Train Station , Delay in laying of tiles at Nellai railway station: Passengers slipped and fell and suffered injuries
× RELATED நெல்லை ரயில் நிலையத்தில் கொரோனா...