×

சுப்ரீம் கோர்ட் முன்பாக தீக்குளித்தது ‘பிஎஸ்பி’ எம்பியால் பலாத்காரத்துக்கு ஆளான பெண்: உத்தரபிரதேச போலீஸ் விசாரணையில் திடுக்

வாரணாசி: உச்சநீதிமன்றத்தின் முன் நேற்று தீக்குளித்த பெண், பகுஜன் சமாஜ் கட்சி எம்பியால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர் என்பது விசாரணயைில் தெரியவந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய சில  நாட்களுக்கு முன், அதாவது 2019ம் ஆண்டு மே 1ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி)  சேர்ந்த வேட்பாளர் அதுல் ராய் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார்  அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவர்  மாவ் மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து 2019ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி வாரணாசி  நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்பி அதுல்  ராய், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள நைனி மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாலியல் பலாத்கார புகார் தெரிவித்த இளம்பெண்ணும், அவரது நண்பரும் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் ‘டி’ வாயில் முன்பாக நேற்று திடீரென தீக்குளித்தனர். படுகாயத்துடன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வாரணாசி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘உச்சநீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்துக் கொண்டவர்கள் விபரம் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது நண்பர் சத்யம் பிரகாஷ் ராய் ஆகியோர் ஆவர். இவர்கள் தற்கொலை முயற்சிக்கு முன்பாக,  பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், வாரணாசி போலீஸ் எஸ்எஸ்பி அமித் பதக், சிஓ பேலுபூர் அமரேஷ் சிங் பாகேல் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அதுல் ராயை காப்பாற்றி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்,  வாரணாசியில் குற்றவியல் மேஜிஸ்திரேட் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. காரணம், அந்த இளம் பெண் தனது வயதை இரண்டு தனித்தனி வழக்குகளில் வெவ்வேறாக நீதிமன்றத்தில் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார் தனக்கு ஆதரவாக செயல்படவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தின் முன் அந்த பெண்ணும், அவரது நண்பரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.


Tags : BSP ,Supreme Court ,Uttar Pradesh , Supreme Court, arsonist, BSP, woman
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...