×

விவசாயி காலில் விழுந்த விவகாரம் பொய்யான தகவல் அளித்து நாடகமாடிய கோவை விஏஓ, உதவியாளர் சஸ்பெண்ட்

கோவை: காலில் விழுந்த வீடியோ வைரலான விவகாரத்தில் பொய்யான தகவலை அளித்து நாடகமாடிய கோவையை சேர்ந்த விஏஓ மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கோவை அன்னூர் அருகே கோபிராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி(38) விவசாயி. இவர் தனது இடப்பிரச்னை தொடர்பாக ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கடந்த 6ம் தேதி சென்றார். அப்போது, கிராம நிர்வாக உதவியாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கோபால்சாமியின் காலில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் விழுவது போன்ற வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் நேரடியாக சென்று விஏஓ உதவியாளர் முத்துசாமி மற்றும் விஏஓ கலைசெல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தி கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி மற்றொரு வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, மனுதாரர் கோபால்சாமியை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தை பேசி கீழே தள்ளியதும், கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி காலில் விழுந்ததுபோல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதுகுறித்த தகவல் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் சமீரன் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த விஏஓ கலைசெல்வி ஆகியோரை பணிமாறுதல் செய்து உத்தரவிட்டார்.

வீடியோவை வைத்து அவர்களின் மீது குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கலெக்டர் அதிரடி நடவடிக்கையாக விஏஓ கலைசெல்வி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி ஆகிய இருவரையும் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : Kovi VAO , Farmer on foot, fell, informed, Coimbatore VO, Assistant, Suspended
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...