×

டீசல் விலையை குறைக்காதது ஏன்? பெட்ரோல் விலை குறைத்ததால் 2 கோடி பேர் பயன்: சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் விளக்கம்

சென்னை: டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்காதது ஏன்? என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பெட்ரோல் விலை குறைத்ததால் 2 கோடி இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்பெற்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிதிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக
எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா( திருப்பரங்குன்றம்)பேசியதாவது: தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்பட்டுள்ள கணினியை மிக விரைவில் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. சட்டமன்றம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஈ மெயில் முலம் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் காகிதம் முறையும் இருக்குமானால் நன்றாக இருக்கும்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: 2017ல் நான் எதிர்கட்சி உறுப்பினராக இருக்கும் போது பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதினேன். அதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வைக்கப்படும் சட்டமன்ற பட்ஜெட் உள்ளிட்ட மானியக் கோரிக்கை புத்தகங்கள் லாரி, லாரியாக குப்பைக்கு அனுப்பப்படுகிறது. அதனால் காகிதம் இல்லாமல் இ-காபி பண்ணலாம் என்று கேட்டேன். ஒன்றிய அரசும் இதற்காக மானியம் வழங்குகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்குவதற்காக 1200 புத்தகம் அடிக்கப்பட்டு வந்தது. இது ஒவ்வொன்றும் 8500 பக்கங்கள் கொண்டது. இது குறித்து ஆய்வு செய்தால் நிறைய உறுப்பினர்கள் படிப்பதே இல்லை. அதனால் தற்போது இ-காபி முறை இருந்தாலும் 400 புத்தகங்கள் அடிக்கப்படுகிறது. தேவையான புத்தகங்களை கோட்டை தலைமை செயலகத்தில் உள்ள நூலகத்தில் உறுப்பினர்கள் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ராஜன் செல்லப்பா: வெறும் கணினியில் மட்டும் பட்ஜெட் புத்தகங்கள் இடம்பெற்றால் எழுத்தாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். தற்போது மதுரையில் பெரிய நூலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது முழுவதும் டிஜிட்டல் நூலகமாக இருக்காமல் புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற வேண்டும்.

பி.டி.ஆர்: நூலகத்தில் கண்டிப்பாக புத்தகங்கள் இருக்கும். ஒரு நூலகத்தில் 10 லட்சம் புத்தகங்களுக்கு இடம் இருக்கும் என்றால் ஒரு கணினியில் 1 கோடி புத்தகங்களை சேமித்து வைக்க முடியும். அதன்படி மதுரையில் அமைய உள்ள நூலகத்தில் மக்கள் அணுகும் புத்தகங்களும் இருக்கும், இ-புக்கும் இருக்கும். உயர்ந்த தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் அந்த நூலகத்தில் இதுவரை இல்லாத வசதியும் இருக்கும்.

ராஜன் செல்லப்பா: வாசிப்பது, சுவாசிப்பதற்கு சமம். சுவாசிப்பது நின்று விடக்கூடாது. தற்போது தாக்கல் செய்த பட்ஜெட் புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் என்கிறார்கள். ஆனால் 2011ம் ஆண்டில் இருந்து பத்து ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் கிடையாது.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: சின்ன சின்ன காரியங்களை பெரிதாக பேசக்கூடாது. அதிமுக ஆட்சியில் பெட்ரோல் - டீசல் மீதான வரியை 2 முறை உயர்த்துள்ளீர்கள். எங்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை கூறினால் நன்றாக இருக்கும். நாங்கள் ஏற்றுகொள்கிறோம். சில சமயம் வரியை ஏற்றித்தான் ஆக வேண்டும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது கூட 1% வரியை உயர்த்திதான் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். சமூக - பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுவது தான் நல்ல அரசாங்கம்.

ராஜன் செல்லப்பா: தமிழகத்தில் ப்ளஸ்2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் கூடுதல் கலை கல்லூரிகள் தேவைப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: தமிழகத்தில் தற்போதுள்ள அரசு கல்லூரியில் இருக்கும் இடங்களை 25% உயர்த்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜன் செல்லப்பா: அதிமுக ஆட்சியில் அதிக அளவு மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டு கூடுதல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் அதிமுக 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாக சொல்கிறார். கலைஞர் முதல்வராக இருந்த போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்று அறிவித்தார். அதன்படி 6 மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு நிர்வாக ஒப்புதலும் அளித்தார். இந்த நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது நடைபெற்று வரும் 11 மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டுமான பணியை ஆய்வு செய்தோம். இதில் ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என மொத்தம் 1650 மருத்துவ மாணவர்களை இந்த ஆண்டே சேர்க்க வேண்டும் என்று டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஒன்றிய அமைச்சரும் ஆய்வு செய்ய குழுவை அனுப்பினார். அதன்படி இந்த ஆண்டே 1650 மருத்துவ மாணவர்களுக்கான கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

ராஜன் செல்லப்பா: பட்ஜெட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. டீசல் பக்கமும் உங்கள் கவனத்தை திருப்பி இருக்கலாம். டீசல் விலையை குறைத்தால் விவசாயிகள் சந்தோசப்படுவார்கள்.

பி.டி.ஆர்: யார் யார் பெட்ரோல் - டீசல் பயன்படுத்துகிறார்கள் என்ற முழு தகவல் இல்லை. வேறு வகையில் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி விவசாயிகள், மீனவர்கள், போக்குவரத்து துறை, தனியார் வைத்துள்ள பெரிய கார்கள் டீசலில் ஓடுகிறது. அதேநேரம் 2 கோடி பேர் பெட்ரோல் மூலம் 2 சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். மீனவர்களுக்கு டீசல் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையினருக்கும் மானியமாக டீசல் வழங்கப்படுகிறது. பெரிய சொகுசு கார்கள் தனியார் வைத்துள்ளனர். அதனால் பெட்ரோல் விலை குறைத்தால் உறுதியாக அதிகமானோர் பயனடைவார்கள் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. லாரிகளுக்கு டீசல் மானியம் கொடுத்தால் நேசனல் பெர்மிட் வைத்துக் கொண்டு இயக்கும் உரிமையாளர்களும் இதை தவறாக பயன்படுத்திவிட கூடாது. அதனால் எல்லாமே ஆய்வு செய்து தற்போது பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். டீசல் பயன்படுத்துபவர்களுக்கு வேறு வகையில் ஊக்கம் கொடுத்துள்ளோம்.

ராஜன் செல்லப்பா: சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி மீண்டும் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். கடந்த காலத்தை போல் இதில் ஏதும் கட்டுப்பாடுகள் உள்ளதா?.

பி.டி.ஆர் : சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி  ரூ.3 கோடியை முன்பு போல் தொகுதிக்காக செலவு செய்யலாம். தற்போது பேரிடர் காலத்தை நாம் தாண்டி விட்டோம்.

ராஜன் செல்லப்பா: வேளாண் பட்ஜெட்டில் நெல், கரும்பு உள்ளிட்ட எல்லா பயிர்களுக்கும் சிறப்பான செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் புயல் மற்றும் மழை காலங்களில் பாதிக்கப்படும் வாழை விவசாயிகளை மறந்து விட்டீர்கள். பனை மரம் போன்று வாழை மரத்திலும் எல்லா நன்மையும் உள்ளது. வெற்றிலை விவசாயிகளும் விடுபட்டுள்ளனர். மதுரை மெட்ரோ ரயில் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உறுதியாக செயல்படுத்தப்படும் என்று கூறப்பட வில்லை.
 
பி.டி.ஆர் : 2016ம் ஆண்டு நான் எதிர்கட்சி எம்.எல்.ஏ ஆக இருந்தபோது மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். 5 வருடத்திற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை இப்போது நிறைவேற்றுகிறோம். சாத்தியக்கூறுகள் பற்றி தற்போது ஆராயப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் உறுதியாக செயல்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Tags : Finance Minister ,Legislative Assembly , Why not reduce diesel prices? 2 crore people benefit from reduction in petrol prices: Finance Minister's explanation in the Legislative Assembly
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி...