×

ஆப்கனில் ஆட்சி அமைப்பது குறித்து கத்தாரில் தாலிபான்கள் ஆலோசனை..அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு அளிப்பதாகவும் அறிவிப்பு!!

காபூல் : ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ள தாலிபான்கள், அவர்கள் அனைவரையும் உடனடியாக பணிக்கு திரும்ப ஆணையிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தாலிபான் அமைப்பினர் கத்தாரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். புதிய அரசுத் துறைகளின் செயல்முறை மற்றும் பெயர் குறித்து டோஹா நகரத்தில் தாலிபான் அமைப்பினர் ஆலோசித்து வருகின்றனர்.

தாலிபான் அமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்தை அகற்றுவது குறித்து முதல் கட்டமாக அவர்கள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கனில் அமைய இருக்கும் தங்களது அரசு குறித்து விரைவில் விரிவான அறிக்கை வெளியிடவும் தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கனில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். ஆப்கனில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் தாலிபானுக்கு ஒரு சோதனை காலம் என்று அந்த அமைப்பின் துணை தலைவர் முல்லா பராதர் தெரிவித்துள்ளதாக காபூலில் செயல்பட்டு வரும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கன் மக்களின் பாதுகாப்பு தற்போது தங்களது பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ள பராதர், நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது குறித்தும் தாலிபான்களின் புதிய கொள்கைகள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே அதிபர் அஷ்ரப் கனி அரசில் பதவி வகித்த அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி உள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் புதிய நம்பிக்கையுடன் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Taliban ,Qatar ,Afghanistan , Afghan, regime, Taliban, consultation
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...